×

தொடர்ந்து உயரும் பாதிப்பு: தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா: பாதித்தவர்களின் எண்ணிக்கை 571 ஆனது

சென்னை: தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து பாதித்தவர்களின் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் 485 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று மட்டும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள் 85 பேர் ஆகும். இது தொடர்பாக சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது :  வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 90,824.

அரசு கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 127. 28 நாள் வீட்டு கண்காணிப்பை முடித்தவர்கள் 10,814. இது வரை 4612 மாதிரகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று (ஏப்.5) கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் 86 பேர். இதில் 85 பேர் டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள். ஒருவர் துபாயில் இருந்த வந்தவர். இன்று காலை ( ஏப். 5) இவர்  மரணமடைந்துவிட்டார். தற்போது தமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் உள்ள தனிமைபடுத்தப்பட்ட வார்டுகளில் உள்ளவர்கள் 1848. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8. தனியார் மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 7 பேர் அதிக பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் 9,22,860 வீடுகளில் உள்ள 38,88,896 பேர் ஆய்வு செய்யப்பட்டுள்ளனர்.  

டெல்லி மாநாடு சென்று வந்தவர்களை கண்டறியும் பணியில் மூன்று துறைகள் இணைந்து செயல்பட்டுவருகிறோம். டெல்லி மாநாடு சென்று வந்த 1246 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி மாநாடுக்கு சென்று வந்தவர்கள் தொடர்பான இறுதி எண்ணிக்கை 2 நாட்களில் கிடைக்கும். கொரோனா பாதிப்பில் தமிழகம் தற்போது வரை இரண்டாவது நிலையில் தான் உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளை முழுமையாக ஆய்வு செய்த பிறகு தான் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க முடியும்.  ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிர் இழந்த விவகாரத்தில், அவர் கொரோனா தொற்றால் தான் உயிரிழந்தார் என்பது அவரின் குடும்பத்தினருக்கு தெரியபடுத்தப்பட்டது. இதில் அலட்சியம் ஏதும் இல்லை.

 இன்று (ஏப். 5) உயிர் இழந்த மற்றொருவருக்கு திடீரென்று மூச்சுதிணறல் ஏற்பட்டது. வெண்டிலேட்டர் பொறுத்தப்பட்ட சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்துவிட்டார்.
முதல் சோதனையில் ஒருவருக்கு பாதிப்பு இல்லை என்று தெரியவந்தாலும், 28 நாட்களில் அவருக்கு எப்போது வேண்டும் என்றாலும் நோய் தொற்று உறுதி செய்யப்படலாம். மகாராஷ்டிராவில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களை விட அதிக பரிசோதனைகள் தமிழகத்தில் எடுக்கப்பட்டுவருகிறது.
பரிசோதனை மையங்கள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில்தான் அதிக சோதனை மையங்கள் உள்ளது. நோயின் தன்மை பல்வேறு நாடுகளில் எப்படி இருந்தது என்பது தொடர்பாக அரசின் குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்து வருகிறது. இதன்படி அரசு செயல்படும்.

சோதனை செய்ய குறைந்த 6 மணி நேரம் ஆகிறது. சில நேரங்களில் இது அதிகரிக்கும். மாதிரிகளை மையத்திற்கு கொண்டு செல்வதற்கான நேரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தற்போதைய நிலவரத்தின்படி தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 95 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 பேருடன் கோவை 2து இடத்திலும், 45 பேருடன் திண்டுக்கல் 3வது இடத்திலும் உள்ளது.

Tags : Corona ,Tamil Nadu , Tamilnadu, Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...