×

கொரோனா எதிரொலியாக வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்

* தொழிற்சாலை மூடியதால் 300 கோடி இழப்பு
* மின்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை: கொரோனா எதிரொலியாக வீடுகளுக்கு மின்தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.  சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள்   வீட்டில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும் இக்கால கட்டத்தில் பெரும்பாலானோருக்கு வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது அனைவருக்கும் மின்சாரம் மிக முக்கியமாக இருக்கிறது. மின்சாரம் தடையில்லாமல் வழங்க வேண்டும் என்பது முதல்வரின் வேண்டுகோள்.

இதை செயல்படுத்தும் வகையில் 80 சதவீத மின்சாரப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். பழுது எங்கு ஏற்பட்டாலும் அங்கு பணியாளர்கள்  அனுப்பப்பட்டு சீரான மின் விநியோகம் உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே ஏப்.14ம் தேதி வரை மின்தடையில்லாமல் இருக்க போதிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பொதுவாக மின்தேவை 4,800 மெகாவாட் அளவுக்குக் குறைந்துள்ளது. இதனால் ஒரே ஒரு அனல் மின் நிலையம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மற்றபடி மத்திய அரசு தொகுப்பில் இருந்து பெறக் கூடிய மின்சாரம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இது தவிர்த்து காற்றாலை, நீர், சூரிய சக்தி உள்ளிட்டவற்றிலிருந்து மின்சாரம் போதிய அளவில் இருக்கிறது. ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தாவிட்டாலும் மின்துண்டிப்பு செய்யக் கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.  இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை என பலர் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். யாருக்குமே மின்துண்டிப்பு செய்யப்படவில்லை. திருவண்ணாமலையில் ஒரு இடத்தில் தெரியாமல் மின்துண்டிப்பு செய்யப்பட்டது. இது உடனடியாக கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு மின்விநியோகம் கொடுக்கப்பட்டது. எனவே அறிவிக்கப்பட்ட தேதி வரை  தொழிற்சாலை, வீடு என எந்தப் பிரிவுக்கும் மின் தடை செய்யப்படமாட்டாது. அதன் பின்னர் முதல்வரைக் கலந்தாலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊரடங்கு உத்தரவு தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை 300 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எந்தத் தொழிற்சாலைகளும் இயங்குவதில்லை. எனவே இனி வரும் காலங்களில் இழப்பு இன்னும் அதிகமாக ஏற்படும். அதற்கானப் பணியாளர்கள் இல்லாத சூழ்நிலையிலும் மின்வாரியப் பணியாளர்கள் அங்கு பணியமர்த்தப்பட்டு, மின்சாரம் தடையில்லாமல் பார்த்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Corona ,homes , Corona, Electricity,Minister of Interior Thangamani
× RELATED தனியார் முதலாளிகள் இனி மின்...