×

வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு...மீறினால் கடும் நடவடிக்கை

சென்னை: வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆங்கிலம் 2வது இடத்திலும், மற்ற மொழிகள் 3வது இடத்திலும் இருக்க வேண்டும். கடை பிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. பெயர்ப்பலகை வைப்பது குறித்த சட்ட விதிகள் பின்பற்றப் படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்திலுள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் நிறுவன பெயர் பலகைகளை தமிழில் வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டுமே வைத்துள்ளன. கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெயர் பலகைகள் அனைத்தும் அந்த மாநில மொழியிலேயே வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் 1987 அரசாணைப்படி ஆட்சி மொழியான தமிழ்மொழியை, அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள் மற்றும் நிறுவனங்களில் முதல் மொழியாக பயன்படுத்த வேண்டும். ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை பயன்படுத்துவதாக இருந்தால் தமிழ் மொழியின் கீழ் 5:3:2 என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும்.

இந்நிலையில் தொழிலாளர் ஆணையம் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை பின்பற்றப்படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடைகள், நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் தமிழ் எழுத்துக்களில் முதன்மையாக இருக்க வேண்டும், மற்ற மொழிகள் பெயர்ப்பலகை உபயோகிக்கப்பட்டால் ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும் , மற்ற மொழிகள் மூன்றாவது இடத்திலும் இருக்க வேண்டும் என்றும் தற்போது அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Business Companies ,Tamil Nadu , Business, Corporate, Name Board, Tamil, Tamil Nadu Government, Action
× RELATED 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3...