×

‘கறி சமைத்து கொடு’ என கேட்டு தகராறு கழுத்தை நெரித்து கணவன் கொலை: மனைவி கைது

தண்டையார்பேட்டை: ‘கறி சமைத்து கொடு’ என கேட்ட தகராறில் கணவனை கழுத்தை நெரித்து  கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.  தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர் ‘வி’ பிளாக்கை சேர்ந்தவர் தணிகைவேல் (46). எண்ணூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரேகா (39). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக தணிகைவேல் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. சம்பள பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் மது அருந்தி வந்ததால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால்,  தனது 2 குழந்தைகளையும் படிக்க வைக்க முடியாமலும், குடும்பத்தை சரிவர நடத்த முடியாமலும் ரேகா அவதிப்பட்டு வந்துள்ளார்.  இதையடுத்து, ரேகா வீட்டுவேலை செய்து அதில் கிடைக்கும் ஊதியத்தில் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தணிகைவேல் வேலை முடிந்து மது போதையில் வீடு திரும்பி உள்ளார்.

 அப்போது, தனக்கு கறி சமைத்து கொடுக்கும்படி மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு, ‘‘சம்பள பணத்தில் மது அருந்திவிட்டு, வீட்டுக்கு ெவறும் கையோடு வந்து, கறி சமைத்து கொடு என்றால் எப்படி சமைக்க முடியும். என்னிடம் பணம் இல்லை,’’ என ரேகா தெரிவித்துள்ளார்.   இதனால் தணிகைவேல், மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரேகா, தனது கணவரை பிடித்து கீழே தள்ளி, கழுத்தை நெரித்துள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர், போலீசாரிடம் இருந்து தப்பிக்க நினைத்த ரேகா, குடும்ப தகராறில் தனது கணவரை கீழே தள்ளியபோது, தலையில் அடிபட்டு இறந்தார், என அக்கம் பக்கத்தினரிடம் நாடகமாடி, அழுது புலம்பியுள்ளார்.

தகவலறிந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, தணிகைவேல் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையின்போது, ரேகா முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர் மீது சந்தேகம் எழுந்தது.  இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது, கணவனை கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ரேகாவை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Curry, husband killed, wife arrested
× RELATED கணவர் தற்கொலை செய்த வழக்கில்...