×

வேலையில்லா திண்டாட்டத்தால் பார்க்கிங் வேலைக்கு குவிந்த பட்டதாரிகள்

சென்னை: பார்க்கிங் வேலைக்கு இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகள் குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையோர வாகன நிறுத்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் படி சென்னையில் சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கும் முறை ஒரு சில மாதங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 80 இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி அண்ணாநகர், பெசன்ட் நகர், புரசைவாக்கம், தி.நகர், காதர் நவாஸ்கான் சாலை, வாலாஜா சாலை, மெரினா உள்ளிட்ட 15 பகுதிகளில் 4375 கார்களை நிறுத்தும் அளவிற்கான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 20 சதவீத இடங்கள் இருசக்கர வாகனங்களுக்கும் 5 சதவீத இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை கண்காணிக்க 460 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு வாகன ஓட்டுனர்கள், பார்க்கிங் உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட  பணிகளுக்கு ஆட்களை மாநகராட்சியுடன் இணைந்து தனியார் நிறுவனம் தேர்வு செய்ய உள்ளதாக அறிவித்தது.  இதற்கு கல்வி தகுதி 10ம்  வகுப்பு என்றும், சம்பளம் 18 ஆயிரம் ரூபாய் என்றும் அறிவிப்பு  வெளியிடப்பட்டது. இதற்கான ஆட்களை தேர்வு செய்யும் பணி கடந்த 5 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்று, நேற்றுடன் முடிவடைந்தது. இந்த வேலைக்கு 1700க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 70 சதவீதம் பேர் பட்டதாரிகள் மற்றும் இன்ஜினியர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற நேர்காணலில் முண்டியடித்து கொண்டு பங்கேற்றனர். 10ம் வகுப்பு கல்வி தகுதியில் அறிவிக்கப்பட்ட பார்க்கிங் வேலைக்கு பட்டதாரிகள் குவிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Graduates , வேலையில்லை,பார்க்கிங் வேலை, பட்டதாரிகள்
× RELATED துப்புரவு தொழிலுக்கு படையெடுத்த பட்டதாரிகள்