×

பணமதிப்பு நீக்கம் செய்த நாளில் தங்கம் விற்ற 15,000 நகை கடைகளுக்கு நோட்டீஸ்: 3 ஆண்டுக்கு பிறகு திடீர் நடவடிக்கை,வரி வருவாய் குறைந்ததால் அதிரடி

புதுடெல்லி: பண மதிப்பு நீக்கம் செய்தபோது நகை விற்பனை செய்த சுமார் 15,000 நகைக்கடைக்காரர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்கும் நோக்கில், பழைய ₹500 மற்றும்  ₹1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி அறிவித்தது. அன்று இரவே, ஏராளமான மக்கள் நகைக்கடைகளில் குவிந்தனர். தங்களிடம் இருந்த பழைய ₹500, ₹1,000 நோட்டுகளை கொடுத்து நகைகளை வாங்கினார்.  பல நகைக்கடைகளில் நள்ளிரவே அனைத்து நகைகளும் விற்று தீர்ந்து விட்டன. தேவை அதிகரித்ததால் ஒரே நாளில் சவரனுக்கு ₹1,456 அதிகரித்தது.  இதை தொடர்ந்து, நகை விற்பனை விவரங்களை வழங்குமாறு வருமான வரித்துறையினர்  நகைக்கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர். பின்னர், அந்த ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் அடிப்படையிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவையெல்லாம் முடிந்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில், வருமான வரித்துறை தற்போது அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதாவது, பண மதிப்பு நீக்கம் செய்த நாளில் நகை விற்பனை செய்த நகைக்கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்  அனுப்பியுள்ளது. இதுகுறித்து நகைக்கடைக்காரர்கள் சிலர்கூறியதாவது:  மூன்று மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறையில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்தது. அதில், பணமதிப்பு நீக்கம் செய்த அன்று இரவு நகை வாங்கியவர்கள் கருப்பு  பணத்தை கொடுத்து வாங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது பற்றிய ஆதாரங்களை வழங்க வேண்டும். அந்த பணத்தை வரியாக செலுத்த வேண்டும் என கோரியிருந்தனர்.  பணமதிப்பு நீக்கம் செய்த இரவில் வழக்கத்தை விட  அதிக விலைக்கு தான் விற்கப்பட்டன. சுமார் 2 வாரங்களில் ஈட்டக்கூடிய வருவாய் ஒரே நாளில் கிடைத்து விட்டது.

இருப்பினும், அன்றைய விற்பனை மூலம் ஈட்டிய பணத்தை வரியாக வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பது சாத்தியமில்லை. இதை எதிர்த்து மேல் முறையீடும் செய்யலாம். ஆனால், சட்ட விதிகளின்படி, சம்பந்தப்பட்ட தொகையில் 20  சதவீதத்தை டெபாசிட் செய்ய வேண்டும். ஒரு வேளை வழக்கில் தோல்வி அடைந்து விட்டால், முழு பணத்தையும் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அதோடு, நகை தொழிலுக்காக வாங்கிய கடன் தொகையை அடைக்க  முடியாது’’ என கவலையுடன் தெரிவித்தனர்.  இதுகுறித்து இந்திய நகை வியாபாரிகள் சங்க செயலாளர் சுரேந்திர மேத்தா கூறுகையில், ‘‘பண மதிப்பு நீக்க தினத்தில் நகை விற்பனை செய்த சுமார் 15,000 நகை வியாபாரிகளுக்கு வருமான  வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. இந்த துறையில் இருந்து மட்டும் வரி வருவாயாக சுமார் ₹50,000 கோடி திரட்ட வருமான வரித்துறையினர் மதிப்பீடு செய்துள்ளனர்.

இது நகை தொழிலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.  வருமான வரித்துறையினரின் இந்த நடவடிக்கை நகை துறையினருக்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்றார்.  வரி ஏய்ப்பு இருந்தால் அதுகுறித்து விசாரணை நடத்த வருமான  வரித்துறைக்கு உரிமை உள்ளது. ஆனால், லாபம் முழுவதையும் வரியாக கோரினால் எப்படி சாத்தியம் என நகை துறையினர் கேள்வி எழுப்புகின்றனர்.  இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், நடப்பு ஆண்டில்  ₹1.5  லட்சம் கோடி முதல் 2 லட்சம் கோடி வரை வரி வசூலிக்கும் விதமாக,  நகைக்கடைகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ்  அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மத்திய அரசுக்கு வரி வருவாய் குறைந்து  வரும் நிலையில்,  வருமான வரித்துறையின் இந்த திடீர் நடவடிக்கை பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : jewelery shops ,action , Money Laundering, Gold, Notices
× RELATED 3 நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை போளூரில் பரபரப்பு