×

இவர் இல்லையேல்... பரதம் இல்லை...இன்று (பிப்ரவரி 24) ருக்மணி தேவி அருண்டேல் நினைவுநாள்

இந்திய சமூகத்தில் தேவதாசிகள் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு பரதநாட்டியம் என்ற பெயரிட்டு மற்றவர்களும் பயில முனைப்புடன் செயல்பட்ட ருக்மணி தேவி அருண்டேல் நினைவுநாள் இன்று. ருக்மணி தேவி, 1904ம் ஆண்டு பிப்.29ம் தேதி மதுரையில் பிறந்தார். இவரது தந்தை நீலகண்ட சாஸ்திரி, அன்னி பெசன்ட் துவக்கிய தியசோபிக்கல் சொசைட்டியில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். சாஸ்திரி தனது பணி ஓய்வுக்கு பிறகு சென்னை அடையாறில் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.

தியசோபிக்கல் சொசைட்டியில் நடைபெறும் ஆண்டுவிழாக்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ருக்மணி, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய மாலினி என்ற நாடகத்தில் நடித்தார். மேலும் ஒரு பாடலும் பாடினார். இதை பார்த்த அவரது தந்தை இசை பயில ஊக்கப்படுத்தினார். ருக்மணி, கிரேக்க நடனமும் கற்றுக் கொண்டார். 1920ம் ஆண்டில் ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்பவரை இங்கிலாந்தில் இருந்து கல்வி மற்றும் இதர பணிகளில் தனக்கு உதவி புரிவதற்காக அன்னிபெசன்ட் அழைத்தார். அன்னிபெசன்ட் அளித்த தேநீர் விருந்தில் ஜார்ஜ் அருண்டேலும், ருக்மணியும் கலந்துகொண்டனர். இருவரும் ஈர்க்கப்பட்டு அன்னி பெசன்ட்டின் அனுமதியோடு, ருக்மணியின் பதினாறாம் வயதில் திருமணம் செய்து கொண்டனர்.
இத்திருமணம் அக்கால கட்டத்தில் ருக்மணியின் உறவினர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ருக்மணி, ஜார்ஜூடன் ஐரோப்பாவிற்கு சென்றார். அங்கு இசை, சிற்பம், ஆப்பரா, பாலே முதலிய பல கலைகளை கற்றார். ரஷ்ய நாட்டு பாலே கலைஞரான அன்னா பாவ்லோவாவிடமும், கிளியோ நார்டி என்பவரிடமும், பாலே நடனம் கற்றுக்கொண்டார். பாவ்லோவா, இந்திய பாரம்பரிய நடனத்தினையும் கற்குமாறு ருக்மணியை கேட்டுக்கொண்டார்.
அதுவரை சதிர் என்ற இந்திய பாரம்பரிய நடனத்தினை ருக்மணி கண்டதில்லை. 1933ம் ஆண்டு சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் சதிர் நடன நிகழ்ச்சியை ருக்மணி காண நேர்ந்தது. அன்று தேவதாசிகளின் சதிர் ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டார். அக்கலையினை கற்றுக்கொள்வதற்கு பலதடைகள் எழுந்தாலும், சதிர் ஆட்டத்தை கற்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

அக்காலத்தில் புகழ்பெற்ற தேவதாசியான மயிலாப்பூர் கவுரி அம்மா என்பவரிடம் தனியாக கற்க ஆரம்பித்தார். இதற்கு ருக்மணியின் கணவரான அருண்டேலும், அன்னையும், தமையன்களும் உறுதுணையாக இருந்தனர். முதலில் கவுரி அம்மாவிடமும், பிறகு பந்தநல்லூர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை என்பவரிடமும் நடனம் பயின்றார். நாட்டியத்தில் நன்றாக பயிற்சி பெற்று, 1935ம் ஆண்டு, தியசோபிக்கல் சொசைட்டியின் வைர விழா கொண்டாட்டத்தின் போது அரங்கேற்றம் செய்தார். பலரும் இவருடைய நடனத்தினை பாராட்டினர். ருக்மணியின் நடனம் அழகியல் மற்றும் ஆன்மீக தன்மை நிறைந்ததாக கருதப்பட்டது.

சதிர் என்ற பரதநாட்டியம், சமூகத்தில் உள்ள பலரும் பயில வேண்டிய ஒன்று என்பதில் உறுதியாக இருந்தார் ருக்மணி. உலகின் சிறந்த அனைத்துக் கலைகளுக்கும் இணையானது இந்தியாவின் சதிர் என்ற அறிந்து, அதற்கு பரதநாட்டியம் என்ற பெயரினை சூட்டினார். இதற்காக கலாக்ஷேத்ரா என்ற கலை பள்ளியை தோற்றுவித்தார்.தேவதாசிகள் மட்டும் பயின்ற சதிர் நடனத்தை அனைவரையும் பயில வைத்ததில் பெரும் பங்கு ருக்மணிக்கு உண்டு. அதுவரை சதிராட்டம் சிருங்கார ரசம் அதிகம் நிறைந்து, பார்வையாளர்களை மகிழ்விப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. ருக்மணி அந்த தளத்திலிருந்து விலகி, ஆன்மிக தன்மையினை வெளிப்படுத்தி அக்கலையை அனைவரும் ரசிப்பதோடு மட்டுமில்லாமல் அனுபவிக்கவும் வழிசெய்தார்.

1977ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், ருக்மணியை குடியரசு தலைவர் பதவியை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலை சார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியை ஏற்க மறுத்தார். 1986ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ருக்மணி இறந்தார். அதன் பிறகு அவர் துவக்கிவைத்த கலாக்ஷேத்ரா தேசிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக பாராளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது. தேவதாசி என்ற முறை ஒழிந்தபோதே சதிர் ஆட்டமும் மறைந்து போயிருக்கும். ஆனால் அதை பரதநாட்டியமாக்கி இன்றுவரை நிலைத்திருக்க செய்த பெருமை ருக்மணி தேவி அம்மையாரையே சாரும்.

Tags : Rukmani Devi Arundel's Memorial ,Rukmani Devi Arundale's Memorial Day , Rukmani Devi Arundale's, Memorial Day, (February 24)
× RELATED நரம்பு மண்டலங்களை பாதிக்கும் ஸ்மோக்...