×

கார் டிரைவரை கையில் போட்டு 2 மணி நேரத்தில் கைவரிசை குரூப் 4 முறைகேடு அரங்கேறியது எப்படி?... புட்டுபுட்டு வைத்தார் புரோக்கர் ஜெயகுமார்

* 300 கேள்வியில் 30க்கு மட்டுமே பதில்
* 5 நிமிடத்தில் எழுத்து அழியும் மேஜிக் மை

சென்னை: குரூப் 4 தேர்வு முறைகேட்டை அரங்கேற்றியது எப்படி என்பது குறித்த விசாரணையில், கைதான புரோக்கர் ஜெயகுமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கார் டிரைவரை கையில் போட்டுக்கொண்டு 2 மணி நேரத்தில் விடைத்தாள் திருத்தி மோசடி செய்ததாகவும், தேர்வில் 300 கேள்விகளுக்கு 30க்கு மட்டுமே பதில் எழுதியும், 5 நிமிடத்தில் அழியும் மை பேனாவை பயன்டுத்தி முறைகேடு செய்ததாகவும் அவர் புட்டு புட்டு வைத்துள்ளார். டிஎன்பிஎஸ்சி  குரூப் 4 தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. குறிப்பாக,  ராமேஸ்வரத்தில் ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 44க்கும்  மேற்பட்டவர்கள் வெற்றி பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆரம்பத்தில்  ராமேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. டிஜிபி ஜாபர்சேட் உத்தரவின்பேரில் எஸ்பிக்கள்  மல்லிகா, விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர்  தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் முக்கிய குற்றவாளியான  புரோக்கர் ஜெயகுமார், எஸ்ஐ சித்தாண்டி, டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தன்  ஆகியோர் உள்பட 40க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம்  விசாரணை நடத்தியதில் குரூப் 4 மட்டுமல்லாது, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ  ஆகிய தேர்வுகளிலும் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதனால் புரோக்கர்  ஜெயகுமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, போலீசில் அவர்  பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சியில்  ஊழியராக உள்ள ஓம்காந்தனுடன் அறிமுகம் ஏற்பட்டது. இதனால் டிஎன்பிஎஸ்சியில்  வேலை தொடர்பாகத்தான் அவரிடம் அறிமுகமானேன். ஆனால் அவர், என்னால் தேர்வு  தாளில் கைவைக்க முடியாது. அதிக மதிப்பெண் போட முடியாது.

இதனால்  வெளிமாவட்டங்களில் தேர்வு எழுதி சென்னைக்கு விடைத்தாள் வருவதற்கு முன்னர்  விடைதாளில் முறைகேடு செய்து மதிப்பெண் கூட்டலாம் என்று தெரிவித்தார். அவர் கொடுத்த ஐடியாவின்படி செயல்பட ஆரம்பித்தோம். முதலில் 2016ம் ஆண்டு விஏஓ தேர்வில் முறைகேடு செய்ய ஆரம்பித்தோம். முறைகேட்டை 2 விதமாக செய்ய  ஆரம்பித்தோம். அதில் ஒன்று மேஜிக் பேனா மூலம் தேர்வு எழுதுவது என்று முடிவு  செய்தோம். இந்த பேனாவில் எழுதினால் 5 நிமிடத்தில் மை அழிந்து விடும். 2வது  குறைந்த கேள்விகளுக்கு விடை எழுதுவது, 300 கேள்விகள் கேட்டால், அதில் 30  கேள்விகளுக்கு மட்டும் விடை எழுதுவது. மீதம் உள்ள கேள்விகளுக்கான விடைகளை  நாங்களே எழுதிக்கொள்வது என்று முடிவு செய்தாம். அதன்படி தேர்வு  மையத்தில் இருந்து காரில் கேள்வித்தாள்கள் ஏற்றப்படும். ஊரை விட்டு  தாண்டியவுடன் காரை நிறுத்துவோம்.

வழக்கமாக விடைத்தாள்களை துணியால் சுற்றி  சீல் வைத்திருப்பார்கள். இதனால் சீலை உடைக்காமல் துணியை வெட்டுவோம்.  பின்னர் அந்த ஓட்டை வழியாக எங்களிடம் பணம் கொடுத்தவர்கள் எழுதிய  விடைத்தாள்களை மட்டும் எடுப்போம். பின்னர் நாங்கள் அந்த விடைத்தாள்களுடன்  காரில் மேல்மருத்துவத்தூர் வந்து விடுவோம். வரும்போது குறைந்தது 100 முதல்  140 கி.மீ. வேகத்தில் வருவோம். ஆனால் விடைத்தாள்களை ஏற்றி வரும் கார் 40  முதல் 50 கி.மீ. வேகத்தில்தான் வரும். இதனால் மேல்மருவத்தூருக்கு  விடைத்தாள் ஏற்றிய கார் வருவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக நாங்கள்  வந்து விடுவோம். கார் டிரைவர் ஓம் காந்தனுக்கு வேண்டியவர்தான் இருப்பார்.  அவர் எங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்பார். பின்னர் நாங்கள்  மதுராந்தகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து 2 மணி நேரத்தில் விடைகளை  எழுதுவோம்.

எங்களுக்கு கேள்விக்கான விடைகளை தஞ்சாவூரைச் சேர்ந்த  ஆசிரியர் செந்தில்குமார் எழுதிக் கொடுப்பார். நாங்கள் 4 பேர், 5 பேர்  சேர்ந்து எங்களால் முடிந்த அளவுக்கு 2 மணி நேரத்துக்குள் விடைகளை  நிரப்பிவிடுவோம். விடைத்தாள் கார் பக்கத்தில் வந்தவுடன் விடைத்தாள்களை  ஏற்கனவே துணியை கிழித்து எடுத்ததுபோல, அப்படியே வைத்து விடுவோம். பின்னர்  கிழிந்த துணியை பேஸ்ட் போட்டு ஒட்டிவிடுவோம். இந்த விடைத்தாள்களை வாங்கி  வைக்கும் பணியை செய்வது ஓம்காந்தன்தான். இதனால் அவர் இந்த குறைகளை கவனிக்க  மாட்டார். பின்னர் அவர்தான் விடைத்தாள்களை திருத்தும் இடத்துக்கு அனுப்பி  வைப்பார். அவர்கள் சீல் சரியாக இருக்கிறதா என்று மட்டுமே பார்ப்பார்கள். மேலும்  முன்பு எவ்வளவு கேள்விகளுக்கு விடை எழுதி முடித்தனர் என்ற விவரம்,  விடைத்தாளில் கேட்கப்படாது.

இதனால் இந்த முறை மூலம் மோசடி செய்தோம். சமீப  காலமாகத்தான், விடைத்தாள் மீது எத்தனை கேள்விகளுக்கு விடை எழுதினார்கள், எவ்வளவு கேள்விகளுக்கு விடை எழுதவில்லை என்று குறிப்பிட வேண்டிய நிலை  உருவானது.
இவ்வாறு ஜெயகுமார் வாக்குமூலம் தெரிவித்ததாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.

* முக்கிய குற்றவாளியான புரோக்கர்  ஜெயகுமார், எஸ்ஐ சித்தாண்டி, டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தன் ஆகியோர் உள்பட 40க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
* இவர்களிடம் விசாரணை  நடத்தியதில் குரூப் 4 மட்டுமல்லாது, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகிய  தேர்வுகளிலும் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

Tags : Handgun Group 4 ,car driver , Group 4 abuse, Jayakumar
× RELATED நீ இல்லாத இடமே இல்லை