×

பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவதை தடுக்க முக்கிய ரயில் நிலையங்களில் நின்றுசெல்லுமா தேஜஸ் ரயில்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சென்னை: தேஜஸ் ரயிலில் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதை தடுக்க, முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் சொகுசு ரயில் கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. குளிர்சாதன வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் 23 பெட்டிகள், 18 குளிர்சாதன இருக்கை வசதி பெட்டிகள், 2 உயர் வகுப்பு பெட்டிகள், 3 டீசல் ஜெனரேட்டர் பெட்டிகள் ஆகியவை உள்ளன.  ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் சிறிய வீடியோ திரைகள், தானியங்கி டீ, காபி இயந்திரங்கள், ஜிபிஎஸ் வசதி, எல்இடி விளக்குகள், பெட்டியின் உட்புறமும், வெளிப்புறமும் தானியங்கி கதவுகள், பயணிகள் இருக்கைகளின் கைப்பிடியில் உள்புறம் மடக்கி அமைக்கப்பட்டுள்ள வெளியே தெரியாத சிற்றுண்டி மேசைகள் உள்ளன. மேலும், செல்போன் சார்ஜர் வசதி, கழிவறை கண்ணாடிகளில் தொடுதிறன் சுவிட்ச் கொண்ட எல்இடி விளக்கு உள்ளிட்ட 22 சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. உயர் வகுப்பு பெட்டியில் 56 பயணிகளும், இருக்கை வசதி கொண்ட பெட்டிகளில் தலா 78 பயணிகளும் பயணிக்கலாம்.

சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த சொகுசு ரயில் பிற்பகல் 12.30 மணிக்கு மதுரைக்கு சென்றடையும். அதே போன்று மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். வியாழக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயில் சென்னையில் இருந்து மதுரைக்கு ஆறரை மணி நேரத்தில் சென்றடையும். சென்னை - மதுரை இடையே ரயிலில் சேர்கார் பெட்டிகளுக்கான கட்டணம் ₹895 என்றும், முதல் வகுப்பு சொகுசுப் பெட்டிக்கு ₹1,940 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் என்ற போதும் கூட எழும்பூர்- மதுரைக்கும், மதுரை- சென்னை எழும்பூருக்கு ஆறரை மணி நேரத்தில் பயணம் செய்ய முடியும் என்பதால் ஆரம்பத்தில் அதிக பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்தனர்.

நாளடைவில் பயணிகள் எண்ணிக்கை குறைய தொடங்கியது. அதேப்போல், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்வதாலும், சில முக்கியமான ரயில் நிலையங்களான தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம் போன்ற ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்வதால் அந்த ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்த முடியாததால் நாளடைவில் தேஜஸ் ரயில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து ெகாண்டே வருகிறது. எனவே, மதுரை-சென்னைக்கு இடையே உள்ள முக்கிய ரயில் நிலையங்களான திண்டுக்கல், அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், கிண்டி, மாம்பலம் போன்ற ரயில் நிலையங்களில் நின்று புறப்பட்டால் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ேமலும், தாம்பரம் ரயில்நிலையத்தில் இந்த ரயிலை நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்த போது அவர்களின் கோரிக்கையை தெற்கு ரயில்வே ஏற்று அனுமதி வழங்கினாலும், மத்திய அரசின் உத்தரவிற்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே மக்களுக்கு பயன்படும் வகையில் முக்கியமான ரயில் நிலையங்களில் தேஜஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்தால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ரயில் பயணிகள் கூறுகின்றனர். மேலும் கடந்த வாரம் மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட தேஜஸ் ரயிலில் ஒரு பெட்டியில் ஒரு பயணி மட்டும் பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Tags : Tejas ,railway stations ,passengers , Number of passengers, railway stations, Tejas train, public
× RELATED நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு