×

குரூப் 2 தேர்வு முறைகேடு விவகாரம் ஜெயகுமார், ஓம்காந்தனிடம் மீண்டும் 6 நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி: மோசடி நடந்த தேர்வு மையத்துக்கு அழைத்து செல்ல சிபிசிஐடி முடிவு

சென்னை: குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் 6 நாள் காவலில் இடைத்தரகர் ஜெயகுமார், டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனிடம் விசாரணை நடத்த பெருநகர குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கி  உள்ளது. இதையடுத்து மோசடி நடந்த தேர்வு மையங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்4, குரூப்2ஏ, விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை குரூப் 2ஏ தேர்வில் நடந்த முறைகேட்டில் ஈடுபட்ட  அரசு அதிகாரிகள் உட்பட 22 நபர்களும், குரூப்4 தேர்வில் மோசடியாக தேர்வு எழுதிய 20 நபர்களும், விஏஓ தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்று கிராம நிர்வாக அலுவலர்கள் 4 பேர் என மொத்தம் இந்த மூன்று வழக்குகளிலும் 47 நபர்களை  சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். மூன்று வழக்குகளும் தனித்தனியாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் குரூப் 2ஏ தேர்வில் நடந்த மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் ஜெயகுமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளர்க் ஓம்காந்தனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று  சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் 7 நாள் காவல் கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த வழக்கு நேற்று சைதாப்பேட்டை 11வது  குற்றவியல் நீதிமன்ற நடுவர் ராஜ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களை கேட்ட நடுவர், ஜெயகுமார் மற்றும் ஓம்காந்தன் ஆகியோரிடம் போலீசார் 6 நாள் காவலில்  எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கி உள்ளார். அவர்களை மீண்டும் வரும் 24ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும்  அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை  நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போது, மோசடியாக தேர்வு நடந்த மையங்களாக ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணை முடிவில்  குரூப்2ஏ தேர்வில் எத்தனை பேர் மோசடியாக தேர்வு எழுதி அரசு பணிகளில் உள்ளனர் என்பது குறித்து தெரியவரும் என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடாக விடைகளை தேர்வு ெசய்து கொடுத்த திருச்சி துறையூரை சேர்ந்த செல்வேந்திரன் மற்றும் மோசடியாக தேர்வு எழுதிய சென்னையை சேர்ந்த பிரபாகரன், கார்த்திகேயன், சம்பத் அகிய 4  பேரிடம் விசாரணை நடத்த எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று 5 நாள் காவல் கோரி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags : Jayakumar ,examination center ,CBCID ,Omkandan ,Group 2 Selection Abuse Issue Jayakumar ,Trial ,Fraud Center ,Court , Group 2 , Jayakumar, Omkandan, trial,: CBCID,
× RELATED மீன்பிடி தடைகாலம் குறைப்பா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி