×

மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கம் இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் புது கோரிக்கை

சென்னை: மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு, உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.திமுக ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் சுமார் 13,500 பேர், கடந்த 2011ம் ஆண்டு பணியிலிருந்து தமிழக அரசால் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதையடுத்து இந்த நடவடிக்கைக்கு எதிராக மக்கள் நல பணியாளர்கள்  தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பணி நீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் உடனடியாக மாற்றுப்பணி வழங்குமாறு கடந்த 2014ல் உத்தரவிட்டது.இந்த உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மாநில அரசின் வாதங்களை ஏற்ற நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை  விதித்து கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தது.

இதைதொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுவை 2020 மார்ச் மாதம் இறுதி  விசாரணையாக எடுத்து விசாரிப்பதாக அறிவித்திருந்தது. இதையடுத்து வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மக்கள் நலப் பணியாளராக பனியாற்றிய தன்ராஜ் என்பவர் சார்பில் நேற்று ஆஜரான வழக்கறிஞர்கள் ஹர்ஷியா கோஷ் மற்றும் ராஜராஜன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் ஒரு  கோரிக்கை வைத்தனர். அதில், “மக்கள் நலப் பணியாளர்கள் விவகாரத்தில் மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு, இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’  என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, “உங்களது கோரிக்கை மனுவை உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து முறையிடுங்கள். இதில் ஒருவேளை அடுத்த நான்கு நாட்களில் வழக்கு பட்டியலிடாவிட்டால் எங்களிடம் வந்து மீண்டும்  முறையிடுங்கள். நாங்கள் அதுகுறித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்கிறோம்’’ என உத்தரவிட்டார்.

Tags : Layoffs ,Supreme Court , Layoffs ,public welfare, request, Supreme Court
× RELATED நாளை முதல் காசிமேட்டில் மீன் சில்லறை விற்பனை தடை: அமைச்சர் ஜெயக்குமார்