×

ஓ.ராஜா டிரைவர் மர்மசாவு: தேனி அருகே கலெக்டர் கார் முற்றுகை

தேனி:  தேனி அருகே போடேந்திரபுரத்தில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவின் தோட்டம் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த முனியாண்டி (42), டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி  ஜெயக்குமாரி (38), மகன் முகேஷ் (24), மகள் மோனிஷா (19). முனியாண்டி, நேற்று காலை 10 மணிக்கு வீட்டில் இருந்து தோட்டத்திற்கு சென்றார். பிற்பகல் 2 மணியளவில் வீட்டிற்கு வந்த போனில், முனியாண்டி ஆபத்தான நிலையில், தேனி  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பாக தகவல் வந்தது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பதறியபடி அங்கு சென்றனர்.

ஆனால் அங்கு முனியாண்டி இறந்துவிட்டதாகவும், உடல் பிரேத பரிசோதனை அறையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால், குடும்பத்தினர்  அதிர்ச்சியடைந்தனர். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள், குடும்பத்தினர், கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர், தேனி - கம்பம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.  அப்போது அவ்வழியாக வந்த கலெக்டர் பல்லவி  பல்தேவின் காரை அவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கலெக்டரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். போலீசில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் செய்தவர்கள் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மண் அள்ளியபோது நடந்த மர்மம்?

முனியாண்டியுடன் பணிபுரியும் சிலர் கூறுகையில், ‘‘தேனி அருகே மாணிக்காபுரத்தில் இருந்து காமராஜபுரம் செல்லும் சாலையில் இருக்கும் ஒரு கண்மாயில், கரம்பை மண்ணை அள்ளியபோது ஏற்பட்ட விபத்தில் முனியாண்டி இறந்ததாக  தெரிகிறது. விபத்து நடந்தவுடன் அவரை காப்பாற்ற ஆம்புலன்ஸ் உதவியை நாடாமல், காரில் எடுத்துச் சென்றிருக்கின்றனர். உறவினர்களுக்கு கூட தெரிவிக்காமல் மருத்துவமனையில் பிணமாக போட்டுவிட்டு சென்றதாகவும் தெரிகிறது. மண்  அள்ளச் சென்ற இடத்தில் என்ன நடந்தது என்பது மர்மமாக உள்ளது’’ என்றனர்.

Tags : Theni ,Marmazou ,O. Raja ,Collector car blockade , O. Raja driver Marmazou: Collector car blockade near Theni
× RELATED கர்நாடகா மாநிலத்தில் இருந்து 150 கிமீ...