×

5,8ம் வகுப்பு பொதுத்தேர்வால் மாணவர்கள் கல்வியை கைவிடும் சூழல் ஏற்படும்: கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்

சென்னை: 5 மற்றும் 8ம் பொதுத்தேர்வால் மாணவர்கள் கல்வியை கைவிடும் சூழல் ஏற்படும் என கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது 5 மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்யக்கோரி தலைமை செயலகத்தில் செங்கோட்டையனிடம் அவர் மனு அளித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே. பாலகிருஷ்ணன், இந்த ஆண்டு முதல் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குழந்தைகள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு இது குறித்து முடிவெடுக்கும் முன்பே, தமிழக அரசு முந்திக் கொண்டு நாட்டிலேயே முதல் மாநிலமாக இத்திட்டத்தை அமல்படுத்த முயற்சிப்பது தமிழக மாணவர்களை மட்டுமல்லாமல், தமிழகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் நடவடிக்கையாகும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தும் என தெரிவித்தார். மேலும் பொதுத்தேர்வால் மாணவர்கள் கல்வியை கைவிடும் சூழல் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஆதலால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும். மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த மாற்றுவழியை அரசு யோசிக்க வேண்டும் எனவும் பாலகிருஷ்ணன் கூறினார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும்  5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதில்லை. ஆதலால் பொதுத்தேர்வை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்து, ஆரம்பப்பள்ளி கல்வித் தரம் உயர நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


Tags : K. Balakrishnan ,general election ,Communist ,election , 5th Class, General Elections, Student, Depression, Communist Secretary of State Balakrishnan
× RELATED நாடாளுமன்றத் தேர்தலுக்கான...