×

சுங்கக்கட்டண விவகாரம் பரனூர் சுங்கச்சாவடியை பொதுமக்கள் சூறை: டிரைவர், கண்டக்டர், டோல் ஊழியர் கைது

சென்னை: செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியை பொதுமக்கள் அடித்து நொறுக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சிக்கு செல்லும் அரசு பஸ்சில் சுங்கக் கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அரசு பஸ் டிரைவருக்கும் சுங்கச்சாவடி ஊழியருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை சுங்கச்சாவடி ஊழியர்கள் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதையடுத்து அனைத்து அரசு பஸ்களையும் சுங்கச்சாவடியின் குறுக்கே நிறுத்தி டிரைவர், கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு 5 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் எரிச்சல் அடைந்த பயணிகள் கீழே இறங்கி சுங்கச்சாவடியின் அனைத்து பூத்துகளின் கண்ணாடி கதவுகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள், ஊழியர்களின் பைக்குகளை அடித்து நொறுக்கினர்.இதுகுறித்து அறிந்ததும் செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதன்பிறகு அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் 20 பேரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருதரப்பினரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். பரனூர் சுங்கச்சாவடியில் அடிதடி நடைபெறுவதற்கு அங்கு பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களே காரணம் என்று கூறப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் குடிபோதையில் இருப்பதால், அரசு வாகன ஓட்டிகளிடம் அடாவடியாக சுங்க கட்டணம் கேட்டு தரக்குறைவாக பேசுவதுடன் அடிதடி தகராறில் ஈடுபடுவதாக பயணிகளும் வாகன ஓட்டிகளும் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த நாராயணன் (38) அரசு பஸ் டிரைவர். திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேலகேம்ப் பகுதியை சேர்ந்த பசும்பொன் (38) அரசு பஸ் கண்டக்டர் புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்த முத்து (40) சுங்கச்சாவடி ஊழியர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags : Public , Customs, Paranormal Customs, Public
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...