×

தமிழக விவசாயிகளை என்றும் கைவிடமாட்டோம்: வைகை செல்வன், முன்னாள் அமைச்சர், அதிமுக செய்தி தொடர்பாளர்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பொறுத்தமட்டில் தமிழக அரசு செயல்படுத்தக்கூடாது; இது மக்களை பாதிக்கக்கூடியது; விவசாயிகள் நலனுக்கு எதிரானது என்று கூறியதால் ஏற்கனவே மத்திய அரசு இந்த திட்டத்தை நிறுத்தி விட்டது. தற்போது மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறி வருகிது. இந்த திட்டம் ஏ பிரிவில் இருந்து பி பிரிவுக்கு மாற்றம் செய்து மத்திய அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த திட்டத்துக்கு மக்களின் கருத்து கேட்கவோ, சுற்றுச்சூழல் அனுமதியோ தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதை நாங்கள் ஆதரிக்கவில்லை. தமிழக அரசின் கருத்தை கேட்டிருந்தால் கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். இதை தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர், ஏ பிரிவில் இருந்து பி பிரிவுக்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும். மக்கள் கருத்ைத கேட்க வேண்டும்.  அப்படியில்லாமல் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற அரசு அனுமதிக்காது; நாங்கள் எங்கள் எதிர்ப்பை தொடர்ந்து தெரிவிப்போம் என்று வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எடப்பாடி ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயத்துக்கு பாதிப்பு உள்ளது. எனவே, இந்த திட்டம் எங்களுக்கு வேண்டாம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படாமல் இருக்க தமிழக அரசு முனைப்போடு பாடுபடும். இந்த திட்டத்துக்கு எதிராக ேபாராடும். மக்கள் உணர்வுக்கு இந்த அரசு என்றைக்கும் மதிப்பு அளிக்கும். மக்கள் உணர்வுகளை மதிப்பளித்து தான் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. எங்களது நிலைப்பாடும் தொடரும். இதில் எந்த மாற்றமும் இல்லை;  மேலும், மத்திய அரசிடம் கூட இதை தெளிவுபடுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களில் எப்படியோ, ஆனால், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த உரிய அனுமதி இல்லை. இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவை என்கிற ஷரத்தை மத்திய அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும். ஒரு போதும் விவசாயிகளுக்கு எதிராக நாங்கள் போக மாட்டோம். விவசாய நிலங்கள் எந்த நிலையிலும் மாசுஅடைவதற்கும், கெட்டு போவதற்கும் தடை ஏற்படுத்தி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். விவசாய நிலங்களை உரிய முறையில் பாதுகாக்கப்படும்.

டெல்டா மண்டல பகுதி பசுமை மண்டல பகுதியாக உள்ளது. எனவே, டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கு அரசு பரிசீலித்து வருகிறது. அதற்கான நடவடிக்கையை இந்த அரசு எடுக்கும். வேளாண் மண்டலமாக மாற்ற முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதற்காக, வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, வேளாண்மை துறை அதிகாரிகள், வேளாண் அறிஞர்களின் கருத்து கேட்கப்பட்டு உரிய முறையில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும். கண்டிப்பாக வேளாண் மண்டலமாக அறிவிக்கலாம். அதற்கு இந்த அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை. தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கருத்து கேட்பு கூட்டம் தேவையில்லை. சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசு ஒரு ஷரத்தை கொண்டு வந்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் முதல்வர் எடப்பாடி பிரதமர், மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு முழுமையாக எதிர்க்கும். விவசாயிகளுக்கு இந்த அரசு எப்போதும் ஆதரவாக இருக்கும்; கைவிடாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

Tags : spokesperson ,Former Minister ,Tamil Nadu ,AIADMK ,Vaigai Selvan ,Minister , Vaigai Selvan, Former Minister , AIADMK Spokesperson
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...