×

பொம்மிடி அருகே போர்க்கள காட்சியை விவரிக்கும் அரிய வகை நடுகல் கண்டுபிடிப்பு: கிபி 8ம் நூற்றாண்டை சேர்ந்தது

தர்மபுரி: பொம்மிடி அருகே போர்க்கள காட்சியை விவரிக்கும், அரிய வகை நடுகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே எஸ்.பாளையம் செல்லும் வழியில் கோட்டைமேடு என்ற பகுதியில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சந்திரசேகர் தலைமையில், அவரது ஆய்வு மாணவர்கள் இம்ரான், ராஜராஜன், மணி, சபரி, பெரியசாமி, ரமேஷ் ஆகியோர் தொன்மம் வரலாற்று ஆய்வு அறக்கட்டளை மூலம் களஆய்வு மேற்கொண்டனர். இதில் கிபி 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் நடுகல் ஒன்று திடலில் மரத்தின் அடியில் அமைந்துள்ளதை கண்டு பிடித்தனர்.
இதைபற்றி வரலாற்று பேராசிரியர் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டு கூறுகையில், தமிழகத்தில் அரிதாக கிடைக்கக்கூடிய நடுகல் வகையாகும்.

இக்கல்வெட்டு கிபி 8ம் நூற்றாண்டு வாக்கில் தகடூர்ப் பகுதியில் நுழைந்து தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்திய கன்னட அரச பரம்பரையைச் சேர்ந்த நுளம்பர்கள் காலத்து கல்வெட்டு. அக்காலகட்டத்தில் இப்பகுதியில் இருந்த அரசர்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட போர் காட்சியை விவரிக்க கூடிய நடுகல் ஆகும். இந்த நடுகல்லை உள்ளூர் மக்கள் இவற்றை கோட்டையப்பன் சாமி என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். இந்த நடுகல்லில் முதலில் இரண்டு குதிரைகளில் இரு வீரர்கள் ஒரு கையில் குதிரையை செலுத்தியவாறும், மறு கையில் வாளை ஓங்கி பிடித்தவாறும், அமைக்கப்பட்டுள்ளன. குதிரையின் கீழ் மற்றொரு குதிரையும் அவற்றில் இன்னொரு வீரனும் அதேபோல காட்டப்பட்டுள்ளான். குதிரையின் கீழ் பகுதியில் மிக நீண்ட மரத்தால் செய்யப்பட்ட கேடயத்தைக் கொண்ட ஒரு வீரன் இன்னொரு வீரனுடன் போரிடுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நீண்ட மரத்தாலான கேடயங்களை தமிழ்நாட்டில் உள்ள மன்னர்கள் பயன்படுத்துவதில்லை. கர்நாடக பகுதியிலிருந்து வரக்கூடியவர்களே அத்தகைய கேடயங்களை பயன்படுத்தியுள்ளனர் என்பதால் நிச்சயமாக இது நுளம்பர் காலத்தைச் சேர்ந்தது என கூற இயலும். மேலும் அருகில் இருக்கக்கூடிய ஒரு குதிரைவீரன் வெற்றிக் கொடியை காட்டுவது போலவும், ஒரு கையில் வீரவாள் உடனும் காணப்படுகின்றான். அதன் மேல்பகுதியில் குதிரையின் மீது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு வீரனை குதிரைத் தூக்கிச்செல்வது போலவும், அருகில் மற்றொரு வீரன் தலை துண்டிக்கப்பட்டது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விருவருக்கும் மேல் இன்னொரு வீரன் வாளைப் பிடித்தவாறு அமர்ந்திருக்கும் நிலையில் காட்சி காட்டப்படுகிறது. மேலும் இந்த நடுகல்லின் ஓரப்பகுதியிலும் மீண்டும் ஒரு வீரன் கையில் வாளுடனும், நீண்ட மரக்கேடயத்தைக் கொண்டும், ஒரு வீரன் இன்னொருவருடன் போரிடுவது போல தெளிவாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய போரிடும் நடுகற்கள் இதுவரை தமிழகத்தில் கிடைக்கவில்லை.

இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும். கோட்டைமேடு என்ற பகுதி ஒரு காலத்தில் இப்பகுதியில் கோட்டையுடன் ஆட்சிபுரிந்து இருக்கக்கூடிய வீரன் இருந்திருக்கவேண்டும், அப்போது இப்பகுதியில் போர் நடைபெற்றிருக்க வேண்டும்.  நுளம்பர்கள் தகடூர் பகுதியில் நுழையும் பொழுது இப்பகுதியை அதியமான் வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களை வெற்றி கொண்ட பிறகே தகடூரில் நுளம்பர்கள் வந்த பிறகு தகடூரின் பெயரானது நுளம்பபாடி என்று அழைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஆகவே இந்த நடுகல் தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Pomidi ,battlefield scene , planting discovery,depicting,battlefield scene , Pomidi: 8th century AD
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண்...