2021ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை: 2021ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியால் எழுப்பப்பட்ட இக்கோரிக்கைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆதரவு கிடைத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது; இது வரவேற்கத்தக்கது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் இந்தியாவில் முழுமையான சமூக நீதியை உறுதி செய்ய முடியாது என்பது தான் பாமகவின் நிலைப்பாடு ஆகும்.  2021ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கடந்த ஜூலை மாதமே பா.ம.க. வலியுறுத்தியிருந்தது.

இதனை தொடர்ந்து, வட மாநிலங்கள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆதரிப்பதாக சுட்டிக்காட்டிய ராமதாஸ், இடஒதுக்கீட்டில் மத்திய அரசு கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தான் அவசியம் என்று கூறியுள்ளார். இந்தியாவில் பின்தங்கிய மக்களை முன்னேற்ற இட ஒதுக்கீடு தான் சிறந்த ஆயுதம் எனும் சூழலில், அந்த ஆயுதத்தை செம்மையாகப் பயன்படுத்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி புள்ளிவிவரத் தொகுப்பை உருவாக்குவது அவசியமாகும். எனவே, 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும். மராட்டியம், ஒடிசா மாநிலங்களைப் பின்பற்றி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Ramadas ,Ramadoss ,Bamaka ,census ,PMK , Ramadas, founder of the census, caste and caste, 2021
× RELATED சாதிவாரி கணக்கெடுப்புக்கு தீர்மானம் ஒடிசா அரசுக்கு ராமதாஸ் பாராட்டு