×

உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை.. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி தேர்தலை நடத்துக : உச்சநீதிமன்றம்

டெல்லி : உள்ளாட்சித் தேர்தலை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் தமிழக தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பாணையின் படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என கூறி திமுக கூட்டணி தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையின் போது, புதிய மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு முறை உள்ளாட்சித் தேர்தலில் கடைபிடிக்கப்படவில்லை என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தரப்பு வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி வாதிடுகையில், 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பு படிதான் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றபட்டவில்லை.சுழற்சி முறையில் வழங்க வேண்டிய பெண்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 1991 மக்கள் தொகை கணக்கீட்டை இப்போதும் பயன்படுத்துகின்றனர். தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திலேயே இதை தெளிவாக கூறியுள்ளனர் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு தீர்ப்பை அளித்தது. அதில், 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கின் அடிப்படையிலேயே ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும். மேலும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தற்போது தடை எதுவும் இல்லை. மேலும் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி


தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு வரும் 27 மற்றும் 30-ந்தேதிகளில் தேர்தல் நடத்தப்போவதாக தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் கடந்த 7-ந்தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 9-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை எதிர்த்து தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.இந்த வழக்கில், வார்டுகளில் இட ஒதுக்கீடு மற்றும் மகளிர் மற்றும் பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில் மறுசுழற்சி ஆகியவற்றை சரி செய்த பின்னர்தான் தேர்தல் அறிவிப்பாணையை தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.


Tags : elections ,election ,Supreme Court ,2011 Census , Supreme Court, Population, Local Government Election, Reservation, Survey, Declaration, Election Commission
× RELATED ஒப்புகைச்சீட்டை வாக்காளர்கள் எடுத்து...