×

வெளிநாட்டில் உள்ள சிலைகளை மீட்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் புதிய ஐ.ஜி அன்பு பேட்டி

சென்னை: வெளிநாட்டில் உள்ள சிலைகளை மீட்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் புதிய ஐ.ஜி அன்பு கூறியுள்ளார். தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய ஐ.ஜி.யை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்நிலையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு, தொடர்ந்து சிறப்பாக செயல்பட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை கிண்டியில் உள்ள சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய ஐ.ஜி. அன்பு, எஸ்.பி. ராஜேஸ்வரி மற்றும் 12 டி.எஸ்.பிக்கள், 6 ஏடி.எஸ்.பி.க்கள் பங்கேற்றனர். பொன்.மாணிக்கவேல் பணியில் இருந்தேபோது யார் யார் எந்தெந்த சிலைக்கடத்தல் வழக்குகளை கையாண்டனர்? அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? வழக்கு தொடர்பாக என்னென்ன ஆவணங்கள் உள்ளன? என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதிய ஐ.ஜி. அன்பு, தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குகளை எப்படி விரைவாக முடிப்பது என்பது குறித்தும், அதிகாரிகள் மேலும் முனைப்பாக செயல்படுவதற்கு என்னென்ன தேவைகள் உள்ளன போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொன்.மாணிக்கவேல் இடமிருந்து கோறப்பட்டுள்ள நிலையில் எந்த ஆவணமோ விளக்கமோ எங்களுக்கு வரவில்லை என தெரிவித்த அவர், வெளிநாட்டில் உள்ள சிலைகளை மீட்பதற்கு சில நிறுவனங்களை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். சிலை கடத்தல் வழக்குகளில் சிறப்பாக செயல்படுவேன் என்று ஐ.ஜி அன்பு உறுதியளித்துள்ளார்.


Tags : Idol Prevention Unit ,interview ,IG Anbu , Statue Trafficking Unit, IG Anbu,pon.manikkavel
× RELATED கொரோனா ஊரடங்கால் தொழிலாளர்கள்...