×

வேலூர் மாவட்டத்தில் தொடரும் சோகம்: ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை சுமந்து சென்ற அவலம்... அணைக்கட்டு அருகே ஆற்றுப்பாலம் அமைக்க கோரிக்கை

அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே ஆற்றில்  இடுப்பளவு தண்ணீரில் மூதாட்டியின் சடலத்தை எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் சுடுகாடு, சுடுகாட்டுக்கு செல்லும் பாதை வசதி இல்லை. இதனால் சடலங்களை எடுத்து செல்லவும், அடக்கம் செய்யவும் அப்பகுதி மக்கள் கடுமையான சோதனைகளை சந்தித்து வருகின்றனர். அந்த வரிசையில் அணைக்கட்டு அருகே நடந்துள்ள சம்பவம்: அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் இறந்தவர்களை அங்குள்ள உத்தரகாவேரி ஆற்றங்கரையை கடந்து ஆற்றங்கரையோரம் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்து வருகின்றனர்.  

ஆனால் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும்போது சடலங்களை தண்ணீரில் இறங்கி ஆபத்தான நிலையில் எடுத்து செல்கின்றனர். எனவே, இங்கு பாலம் அமைக்க வேண்டும் என ஒடுகத்தூர் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில், ஒடுகத்தூர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி நேற்றுமுன்தினம் இறந்தார். அவரை அடக்கம் செய்ய உத்தரகாவேரியில் இடுப்பளவு தண்ணீரில் ஆபத்தான நிலையில் சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்தினர் உத்தரகாவேரி ஆற்றில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலம் அமைக்காவிட்டால் மாற்றுப்பாதையை தேர்வு செய்து சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : district ,Vellore ,dam ,river bridge , Vellore, river, corpse
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...