×

சென்னையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி பரிதாப பலி

சென்னை: சென்னை ராயப்பேட்டை அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மயக்கமடைந்த தம்பியை காப்பாற்றிய அண்ணன் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை ராயப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஹாப்பிங் மாலின் கீழ் தளத்தில் கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை சுத்தம் செய்வதற்காக இன்று அதிகாலை 4 மணியளவில் ஐஸ் ஹவுஸ் பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவர் அருண்குமார், ரஞ்சித்குமார், யுவராஜ், அஜித்குமார், ஸ்ரீநாத் ஆகிய 5 பேரை அழைத்து சென்றுள்ளார். இவர்களில் ரஞ்சித்குமார் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கி மயக்கமடைந்தார்.

இதை கண்ட அவரது அண்ணன் அருண்குமார், தம்பி ரஞ்சித்குமாரை காப்பாற்றுவதற்கு கழிவுநீர் தொட்டியில் இறங்கி மேலே தூக்கி விட்டார். பிறகு அவர் மேலே ஏற முயன்றபோது, விஷவாயு தாக்கி அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூராய்விற்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து மயக்கமடைந்த தம்பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகுந்த உபகரணம் இல்லாமல் கழிவு நீர் தொட்டியில் இறங்கியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா சாலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Chennai ,gas attack , Chennai, waste water tank, worker, poison gas, dies
× RELATED மொபட் மோதி தொழிலாளி பலி