×

தமிழக போலீசாருக்கு சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் பொன்.மாணிக்கவேல் ஒத்துழைக்கவில்லை: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: தமிழக சிலை கடத்தல் போலீசாருடன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன்.மாணிக்கவேல் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக பணி நீட்டிப்பு செய்ததற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து மனுவை  விசாரித்த நீதிமன்றம், பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்தது செல்லும் என்றும், அதற்கான அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு உண்டு என கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் சிலை கடத்தல் தொடர்பான  வழக்கு விசாரணை அறிக்கையை பொன்.மாணிக்கவேல் தமிழக சிலை கடத்தல் பிரிவு உயர் போலீஸ் அதிகாரியிடம் (ஏடிஜிபி) ஒப்படைக்க வேண்டும் என வழங்கிய உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் உச்ச  நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில்,”சிலை கடத்தல் விவகாரத்தில் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதில் இருந்து துறை சார்ந்த போலீஸ் அதிகாரிகளை மதிப்பதில்லை. மேலும்  அவர்களுக்கு வழக்கு தொடர்பான ஒத்துழைப்பையும் அளிப்பது கிடையாது. இதில் விசாரணை விவரங்களை தமிழக போலீசாரிடம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் இதுவரை  வழக்கு தொடர்பாக எதையும் பொன்.மாணிக்கவேல் கொடுக்கவில்லை. மேலும் அவர் விரைவில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். அதனால் சிலை கடத்தல் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை விவரங்கள், ஆவணங்கள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றை தமிழக சிலை கடத்தல் பிரிவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Ponni Manikkel ,Tamil Nadu ,Petition to Supreme Court ,Ponni Manickavel ,Supreme Court of India , Tamil Nadu. police. Ponni Manickavel . Tamil Nadu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...