×

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவோரிடம் வசூல் வேட்டை

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டு உள்ளிட்ட இடங்களில் யாராவது பணம் கேட்டால், உடனடியாக புகார் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டீன் வனிதா எச்சரித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் அத்தனை இடங்களிலும் தெரிந்தும், தெரியாமலும் லஞ்சம் இருக்கத்தான் செய்கிறது. கட்டாயப்படுத்துவதுடன், லஞ்சம் கிடைக்காததால்,  சேவை வழங்காமலும் சில ஊழியர்கள் செயல்படுவது, சேவை உணர்வுடன் பணியாற்றி வரும் மற்ற ஊழியர்களின் செயல்பாடுகளை, உணர்வுகளை பாதிக்கிறது. அரசு மருத்துவமனையை பொருத்தவரை, காயங்களுக்கு கட்டுப்போடும் இடம், விபத்து  சிகிச்சை பிரிவு, ஆபரேஷன் தியேட்டர்கள், பிரசவ வார்டு, பிணவறை போன்ற  இடங்களில்தான் லஞ்ச வேட்டை அதிகம் உள்ளது. பிரசவ வார்டில் அனுமதி  இல்லாத நேரத்தில் வார்டுக்குள் செல்வதற்கும், ஒரு கர்ப்பிணிக்கு குழந்தை  பிறந்தவுடன் அதை வெளியில் காத்திருக்கும், அவரது உறவினர்களுக்கு தகவல்  கூறுவதற்கும்தான் லஞ்சம் வாங்கப்படுகிறது. அதுவும் ஆண் குழந்தை என்றால் ஒரு தொகை, பெண் குழந்தை என்றால் ஒரு தொகை என, உறவினர்களின் தோற்றத்தைப் பார்த்து நிர்ணயம் செய்கின்றனர். அந்த தொகையை வலுக்கட்டாயமாக வசூல் செய்யும் போதுதான், லஞ்சம் கேட்பது வெளியே தெரிந்து பிரச்னையாகி விடுகிறது.

அதுமட்டுமல்ல, தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால், பல ஆயிரங்கள் வந்திருக்கும்’’ என்றும், இந்த தொகை எங்களுக்கு மட்டுமல்ல உள்ளே உள்ளவர்களுக்கும் கொடுக்க வேண்டும்’’ என்றும் கூறி, லஞ்சம் கேட்பதாகவும் புகார் கூறப்படுகிறது. குறைந்த பட்சமாக ஆண் குழந்தை பிறந்தால், ரூ.1000, பெண் குழந்தை பிறந்தால் ரூ.500 என்பது பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்படாத கட்டணமாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அரசு தரும் குழந்தை பரிசு பெட்டகத்திற்கு ரூ.ஆயிரம் வரை லஞ்சம் கேட்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி நேரத்தில் பிணவறையில் உடலை விரைவாக பரிசோதித்துத்தர, இறந்தவரின் உறவினர்களிடம் ‘வெடிபாக்ஸ்’ லஞ்சமாகபெற்றுள்ளனர். டாக்டர்களுக்கும், ஊழியர்களுக்கும் கொடுக்க வேண்டும் எனக்கோரி சிலர் கேட்டதால் பிரச்னை வெளியே தெரிந்து பரபரப்பு ஏற்பட்டது. அப்போது டீனாக இருந்த டாக்டர் மருதுபாண்டியனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தினர். இதில் தவறு செய்த 2 பேர் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதேபோல், சமீபத்தில் பிரசவ வார்டில் தனியார் நிறுவன பெண் பாதுகாப்பு ஊழியர் ஒருவர், வருவோரிடம் எல்லாம் பணம் வாங்குவதையும் நோயாளியின் உறவினர் ஒருவர் செல்போனில் படம் எடுத்தார். அந்த வீடியோ காட்சியும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனையும் டீன் விசாரித்து, அந்த பெண்ணை பணிமாற்றம் செய்தார். இப்படி மருத்துவமனைக்குள் ஊழியர்கள் லஞ்சம் பெறுவதை, லஞ்சம் கொடுப்போரும், நோயாளிகளின் உறவினர்களும் செல்போனில் வீடியோ எடுத்து விடுகின்றனர். இது அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனையின் மூத்த டாக்டர் ஒருவர் கூறும்போது, ‘‘லஞ்சம் கொடுப்பவர்களே, ஊழியர்கள் லஞ்சம் பெறுவதை வீடியோ எடுப்பதால், இதுகுறித்த அச்சம் அதிகரித்துள்ளது. உரிய வீடியோ ஆதாரங்களை நோயாளிகளின் உறவினர்களே சமர்ப்பித்தாலும், இதற்கென உள்ள குழுவினர் கடும் நடவடிக்கை எடுப்பர். இதுதவிர, ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து காரியத்தை நிறைவேற்ற நினைப்பதில் இருந்தும் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் மாற்றம் பெறுவதும் அவசியம்’’ என்றார்.

Tags : Government Hospital , Government Hospital
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்