×

மடிப்பாக்கம் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளில் புகுந்தது

* தொற்றுநோய் பரவும் அபாயம்
* கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ஆலந்தூர்: மடிப்பாக்கம் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து தெருக்கள் மற்றும் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  
சென்னை மாநகராட்சி, 14வது மண்டலம், 188வது வார்டுக்கு உட்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் பெரியார் நகர், ராம் நகர், சதாசிவம் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதுமட்டுமின்றி, ஏராளமான வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. ஆனால், இங்கு முறையான வடிகால் வசதி இல்லாததால், சிறிய மழைக்கே தெருக்கள் வெள்ளக்காடாக மாறும் நிலை உள்ளது.

அதுமட்டுமின்றி, மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்குவதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து இப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மடிப்பாக்கம் பகுதி ஊராட்சியாக இருந்தபோது, தெருக்களில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான மழைநீர் கால்வாய்கள் தற்போது சிதிலமடைந்தும், பல இடங்களில் கால்வாய் உடைந்து, தூர்ந்தும் காணப்படுகிறது. இதனால், மழைக்காலங்களில் நீரோட்டம் தடைபட்டு, வீடுகளை சூழ்கிறது.   தற்போது, இப்பகுதியில் வீடுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாலும், இப்பகுதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னரும் முறையான வடிகால் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததாலும் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
 
இங்குள்ள முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வடிகால்களை அவ்வப்போது தூர்வாரும் மாநகராட்சி ஊழியர்கள், அதில் இருந்து எடுக்கப்படும் திடக்கழிவுகளை முறையாக அகற்றாமல், அதே பகுதியில் குவித்து வைக்கின்றனர். இதனால், மழைக்காலங்களில் அந்த திடக்கழிவுகள் மீண்டும் கால்வாய்க்குள் விழுந்து, நீரோட்டம் தடைபடுகிறது. எனவே, மடிப்பாக்கம் பகுதியில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் சிறிய மழைக்கே தெருக்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி வருகிறது. குறிப்பாக, பஜார் சாலையில் சதாசிவம் நகர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள போலீஸ் பூத் பகுதியில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்குவதால் அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.     

அதேபோல், புழுதிவாக்கம், வடக்கு ராம் நகர், ராமலிங்கம் நகர், ராமநாதன் தெரு, சிவசுப்ரமணியன் நகர், பத்மாவதி தெரு, பாகிரதி தெரு போன்ற பகுதிகளில் தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மடிப்பாக்கம் தெற்கு ராம் நகர் பகுதிக்கு உட்பட்ட சதாசிவம் நகர் 3வது தெரு மற்றும் சதாசிவம் நகர் பிரதான சாலை போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ராம் நகர் 3, 8 மற்றும் 9வது தெருக்களில் மழைநீர் குளம்போல் தேங்குகிறது. இதனால், வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் மழைநீருடன் கலந்த சாக்கடை நீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மடிப்பாக்கம் பகுதி மக்கள் ஆண்டுதோறும் மாநகராட்சிக்கு அனைத்து வரிகளையும் முறையாக செலுத்தி வருகிறோம். ஆனால், இங்கு மழைநீர் வடிகால் வசதி முறையாக செய்து தரப்படவில்லை. இதனால், ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துவிடுகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மடிப்பாக்கம் மண்ணடி அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல தெருக்கள் தாழ்வான பகுதி என்பதால், மழைநீர் வெளியேற முடியாமல் தேங்குகிறது. இதில், கொசு உற்பத்தி அதிகரித்து மர்ம காய்ச்சலால் பலர் தவித்து வருகின்றனர்.எனவே, மாநகராட்சி அதிகாரிகள் பெரிய அளவில் மழை தொடங்கும் முன்பு, இப்பகுதிக்கு வடிகால் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.Tags : area ,Madipakkam ,houses , Madipakkam, rainwater, sewage
× RELATED திண்டுக்கல் அருகே சாலையில் கழிவுநீர் ஓடுவதால் மக்கள் அவதி