×

டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க டாஸ்மாக் கடை அருகில் தண்ணீர் தேங்கவிடக்கூடாது: ஊழியர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தல்

சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என கடை பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 17ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால், அனைத்து மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இதேபோல், இன்று தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கும் வேலையில் டாஸ்மாக் கடைகளில் சரக்குகள் இருப்பு வைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை இருப்பு வைக்கும் பணி  மாவட்ட மேலாளர்கள் மேற்பார்வையில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 350 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பெய்து வரும் பருவமழை காரணமாக டெங்கு மற்றும் வைரல் காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. எனவே, இதை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் தண்ணீர் தேங்கவிடாமல் அதை  உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: பெரும்பாலும் டாஸ்மாக் கடைகள், பார்கள் சுத்தமாக இல்லை என்ற தொடர் குற்றச்சாட்டு தலைமை அலுவலகத்திற்கு வந்தவண்ணம் உள்ளது. எனவே, கடைகள் மற்றும் பார்களை சுத்தமாக வைத்திருக்க தனிக்குழு ஒன்றை டாஸ்மாக்  நிர்வாகம் ஏற்படுத்தியது. இதேபோல், வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளதால் கடைகளுக்கு அருகில் தண்ணீர் தேங்காமலும், குப்பை சேராமலும்  பார்த்துக்கொள்ளுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட மேலாளர்கள் மற்றும் ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள் இப்பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதேபோல், பாதுகாப்பு உபகரணங்கள் கண்டிப்பாக கடைகளில் இருக்க வேண்டும். எனவே, நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பை  வழங்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.Tags : Task Shop ,Task Shop Water Stagnation , dengue ,mosquito,Shop,Management ,f Staff
× RELATED வண்டலூர் உட்கோட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் திறப்பு