×

சென்னையில் பசுவின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: கால்நடை மருத்துவர்கள் சாதனை

சென்னை: சென்னையில் ஒரு பசுமாட்டின் வயிற்றிலிருந்து 52 கிலோ எடையுள்ள நெகிழி கழிவுகளை தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் நெகிழி பொருட்களால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்த முனிரத்னம் என்பவரது பசுவிற்கு கடுமையான உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பசுவின் வயிற்றில் வலி ஏற்பட்டதால் அது தன் கால்களை கொண்டு வயிற்றை அடிக்கடி உதைத்துள்ளது. மேலும் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க பசு மிகவும் சிரமப்பட்டதை அறிந்த முனிரத்னம் அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். பின்பு மேல்சிகிச்சைக்காக வேப்பேரியில் உள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக மருத்துவமனையில் பசு அனுமதிக்கப்பட்டது. அங்கு பசுவின் வயிற்றில் நெகிழி கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றுவது என திட்டமிடப்பட்டது.

இதையடுத்து வெள்ளியன்று காலை 11 மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு 4.30 மணிக்கு நிறைவு செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையில் 52 கிலோ எடையுள்ள நெகிழி கழிவுகள் பசுவின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டன. பசுவின் இரைப்பையை 75 சதவிகித நெகிழி கழிவுகள் ஆக்கிரமித்திருந்ததாகவும் அவற்றை அகற்றியது சவாலாக இருந்ததாகவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். தனியார் மருத்துவமனைகளில் இத்தகைய அறுவை சிகிச்சைகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலையில், இதற்கு அரசு மருத்துவமனையில் சுமார் 200 ரூபாய் மட்டுமே செலவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மனிதர்கள் வீசி எறிந்த நெகிழி கழிவுகளை உட்கொண்டதாலேயே பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நெகிழி கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது மற்ற உயிரினங்களுக்கும் ஏற்படுத்தும் பாதிப்பை உணர்த்தும் விதமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.


Tags : Chennai , Chennai, Cow, 52kg Plastic Waste, Disposal, Veterinarians, Adventure
× RELATED கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்திய...