வீரப்பன் அண்ணன் மாதையனுக்கு 1 மாதம் பரோல் : உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மனைவியின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனின் அண்ணன் மாதையன் (71). கோவை சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மேட்டூர், கருமலைக்கூடலில் உள்ள தனது மகள் ஜெயம்மாள் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில்,  மாதையன் தரப்பில் பரோல் கேட்டு அரசுக்கு  விண்ணப்பிக்கப்பட்டது. கோரிக்கை பரிசீலிக்கப்படாததால் மாதையனின் மகள் ஜெயம்மாள் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். மனுவில், 1987ல் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, என் தந்தை மாதையன் சிறையில் உள்ளார். 32 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர், முன்கூட்டியே விடுதலை பெற தகுதி இருந்தும், அரசு அவரை விடுதலை செய்யவில்லை.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. தற்போது என் தாயார் மாரியம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்தப்படுக்கையாக இருக்கிறார். அவரை பார்க்க என் தந்தைக்கு 30 நாட்கள் பரோல் வழங்கவேண்டும் என்ற கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாதையனுக்கு 30 நாட்கள் பரோல் வழகப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.


Tags : Madhayan ,Veerappan ,High Court , 1 month parole, Veerappan's brother Madhayan
× RELATED பேரறிவாளன் பரோல் இன்றுடன் நிறைவு