×

தேர்தல் வெற்றியுடன் தீபாவளி கொண்டாட தயாராகி விட்டோம்: சிவசேனா, பாஜ தலைவர்கள் பேட்டி

மும்பை: தேர்தலில் வெற்றி பெற்று மகாராஷ்டிராவில் இரண்டாவது முறையாக தங்கள் கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் என்று சிவசேனா, பாஜ தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.சிவசேனா செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவுத் கூறுகையில், ‘‘தேர்தல் வெற்றியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட நாங்கள் ஏற்கனவே தயராகி விட்டோம். தீபாவளிக்கு முன்பாகவே பட்டாசு வெடிக்க  காத்திருக்கிறோம்’’ என்றார்.பாஜ மூத்த தலைவரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான வினோத் தாவ்டே கூறுகையில், ‘‘முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் தலைமையில் எங்களது கூட்டணி மீண்டும் வெற்றி பெறும். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு  15 ஆண்டுகளில் செய்யாத சாதனைகளை எங்களது அரசு கடந்த 5 ஆண்டுகளில் செய்திருக்கிறது. எங்கள் அரசின் சாதனை எங்களுக்கு மீண்டும் வெற்றியைத் தேடித்தரும்’’ என்றார்.இதற்கிடையே, சமீபத்தில் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜ.வில் சேர்ந்த உதயன்ராஜே போசலேயின் சத்தாரா மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது குறித்து மாநில பாஜ தலைவர் சந்திரகாந்த்  பாட்டீலிடம் கேட்டதற்கு, ‘‘சத்தாரா மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது உண்மைதான். ஆனால், உதயன்ராஜே போசலே இப்போது ஒரு பாஜ தொண்டர். அவர் பாஜ-சிவசேனா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக  நிச்சயம் வேலை செய்வார்’’ என்று கூறினார்.நாளை(இன்று) அமித்ஷாவின் மும்பை பயணத்தின்போது பாஜ-சிவசேனா இடையேயான தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்விக்கு, ‘‘அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது’’ என்று சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார்.

மீண்டும் முதல்வராவேன் தேவேந்திர பட்நவிஸ் உறுதி
மகாராஷ்டிரா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நேற்று பேட்டியளித்த முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கூறியதாவது;அடுத்த மாதம் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை பாஜ.வும் சிவசேனாவும் இணைந்து சந்திக்கும். இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நான் மீண்டும் முதல்வராக பதவியேற்பேன். பாஜ 162 இடங்களிலும் சிவசேனா 126 இடங்களிலும்  போட்டியிடும் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மையல்ல. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டவுடன்  அது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.

100 தொகுதிகளில் போட்டியிட நவ நிர்மாண் சேனா திட்டம்
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்து போட்டியிட திட்டமிட்டது. ஆனால், இதற்கு காங்கிரஸ் கட்சி இடையூறாக  இருந்தது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி இதற்கு விரும்பினாலும் வட இந்தியர்களின் வாக்குகளை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி, நவ நிர்மாண் சேனாவை கூட்டணியில் சேர்க்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. ராஜ் தாக்கரே  இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து பேசினார். ஆனாலும் முடிவாகவில்லை. காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீட்டை முடித்து விட்டது. சிறிய கட்சிகளுக்கு 38 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடுவதா வேண்டாமா என்பது குறித்து ராஜ் தாக்கரே தீவிரமாக  பரிசீலித்து வந்தார்.

அதோடு மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரும் வரை தேர்தலை புறக்கணிப்பது குறித்தும் ராஜ் தாக்கரே ஆலோசித்து வந்தார். கூட்டணி தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும் சந்தித்து பேசினார்.  இந்நிலையில்,  தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளை அழைத்து நேற்று முன்தினம் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. நவ நிர்மாண் சேனாவுக்கு செல்வாக்கு உள்ள தானே, மும்பை,  நாசிக், புனே போன்ற மாவட்டங்களில் உள்ள 100 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவது என்று அக்கட்சி முடிவு செய்துள்ளது.

Tags : Diwali ,BJP ,leaders ,Shiv Sena , preparing ,celebrate, Diwali ,Shiv Sena ,BJP leaders
× RELATED கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல்...