×

அடுத்து 24 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மைய இயக்குனர் பேட்டி

சென்னை: அடுத்து 24 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடதமிழக பகுதிகளின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில் அநேக இடங்களிலும் கனமழையும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், திருவள்ளூரில் 22 செ.மீ, பூண்டியில் 21 செ.மீ, அரக்கோணத்தில் 17 செ.மீ, தாமரைப்பாக்கத்தில் 15 செ.மீ அளவில் மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் வடதமிழகத்தின் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொறுத்தவரையில், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரையில் இடைவெளி விட்டு சில முறை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மீனவர்கள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அடுத்து வரும் இரு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த மழை நிலவரமானது அடுத்த 2 அல்லது 3 தினங்களுக்கு தமிழக பகுதிகளில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்று தெரிவித்துள்ளார்.



Tags : districts ,Meteorological Director ,Vellore ,Thiruvallur ,Chennai , Rain, Chennai, Weather Center, Balachandran, Tiruvallur
× RELATED ஒரே நாளில் ₹12.64 கோடிக்கு டாஸ்மாக்...