×

கடந்த 16 நாட்களில் 51 டிஎம்சி நீர் கர்நாடகா திறப்பு: 30 டிஎம்சி கடலில் வீணாக கலப்பு: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: கடந்த 16 நாட்களில் 51 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இந்த தண்ணீரை சேமிக்க கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் 30 டிஎம்சி வரை கடலில் கலந்து வீணாகி இருப்பது தெரிய வந்துள்ளது.  காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் மே 31ம் தேதி வரை தவணைகாலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் ஒவ்வொரு ஆண்டும் 177 டிஎம்சி தமிழக அரசுக்கு கர்நாடகா தர வேண்டும். ஆனால், கடந்த ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சிக்கு பதில் 2.06 டிஎம்சியும், ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சிக்கு பதில் 7.44 டிஎம்சி மட்டுமே கர்நாடகா தந்தது. இது தொடர்பாக காவிரி ஆணையத்திடம் தமிழக அரசு புகார் அளித்தது. இதையடுத்து கர்நாடகாவுக்கு ஒப்பந்தப்படி தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தாக்கம் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் அணைகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதன்காரணமாக, கிருஷ்ணராஜா சாகர் அணை, கபினி அணை, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளில் நீர் இருப்பு முழு கொள்ளளவை எட்டியதால், கடந்த ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 45.95 டிஎம்சிக்கு பதில் 92.33 டிஎம்சியாகவும், செப்டம்பரில் 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை 16.60 டிஎம்சிக்கு 51.62 நீர் தந்துள்ளது.  தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு 16,154 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது வரை 153.46 டிஎம்சிக்கு 105.98 டிம்சி கர்நாடகா தந்துள்ளது.

இந்த நிலையில் 93 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணை முழுவதுமாக நிரம்பியுள்ளதால் அதன் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை சேமித்து வைக்க போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதன் காரணமாக உபரி நீர் முழுவதும் கொள்ளிடம் வழியாக கடலில் கலக்கிறது. தற்போது வரை 30 டிஎம்சி கடலில் கலந்துள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Tmc Water Karnataka ,TMC Waste Blend ,Sea ,TMC Wasted Blend ,Sea: Sensational Information Exposed. 51 TMC Water Karnataka , TMC ft of water, Karnataka, Sea
× RELATED சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றம்