×

படகுதான்... ஆனால், படகல்ல!

நன்றி குங்குமம்

இங்கிலாந்தின் நார்ஃபோக் மாவட்டத்தின் ஓர் அடையாளம் டெத் நதி. சுமார் 35 கிலோ மீட்டர் நீளமுள்ள அழகான நதி இது. கரையில் அமர்ந்து பொழுதுபோக்குவதற்காக மட்டுமே தினமும் நூற்றுக்கணக்கானோர் இந்நதியை நோக்கிப் படையெடுக்கின்றனர். தாங்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களை அங்கேயிருக்கும் ஆயிரக்கணக்கான வாத்துகளுக்குக் கொடுத்து மகிழ்கின்றனர். ஆனால், உணவுப்பொருட்களைக் கொண்டு வரும் பையை அப்படியே நதியில் வீசிவிடுகின்றனர்.முக்கியமாக பிரட் பாக்கெட்டுகள். அத்துடன் தண்ணீர் பாட்டில்களையும் நதிக்குள் போட்டுவிடுகின்றனர்.
நதியைப் பராமரிக்கும் தொண்டு நிறுவனம் எவ்வளவு சொல்லியும் மக்கள் கேட்பதாகத் தெரியவில்லை.

சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் மாசுபாட்டால் நதியே சீரழிந்துவிட்டது. அங்கே வாழும் மீன்களும் இறந்து கரையொதுங்கின. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை இப்படியே விட்டு விடக்கூடாது என்று முடிவு செய்த தொண்டு நிறுவனத்தின் தலைவர் சீன் ரெட்டி நதிக்குள் விழுந்த பிளாஸ்டிக் பொருட்களை, குறிப்பாக தண்ணீர் பாட்டில்களை அப்புறப்படுத்தி மறுசுழற்சி செய்தார். அந்த பாட்டில்களால் ஒருவர் பயணிக்கக்கூடிய ஒரு படகைத் தயாரித்தார். அந்தப் படகில் பொருத்தப்பட்டிருக்கும் பாய்மரம் கூட நதியில் இருந்து சேகரித்த பிளாஸ்டிக் கவர்கள் என்பது இதில் ஹைலைட்.

கடந்த வாரம் தானே வடிவமைத்த பிளாஸ்டிக் படகால் நதி முழுவதும் பயணித்து பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு செய்திருக்கிறார் ரெட்டி.‘‘நான் பயணித்த படகு மூழ்கிவிடும் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்த்தனர். ஆனால், நான் மூழ்கவிடவில்லை. கரைக்கு வந்ததும் , ‘என்ன இது? புதுசா இருக்கிறதே...’ என்று விசாரித்தனர். அப்போது எதற்காக இந்த பிளாஸ்டிக் படகை வடிவமைத்தேன் என்பதை அவர்களுக்குச் சொன்னேன். எல்லோரும் சில நொடிகள் மௌனமாக நின்றனர்...’’ என்கிற ரெட்டியின் குழு மாதந்தோறும் நதியில் இறங்கி பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுகிறது. இதற்காக அவர்கள் யாரிடமும் பணமோ, உதவியோ கேட்பதில்லை.                 

த.சக்திவேல்

Tags : Norfolk, Death River, Plastic, Boat
× RELATED 17-05-2020 இன்றைய சிறப்பு படங்குள்