சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று இறங்கு முகம்...: சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.28,888க்கு விற்பனை

சென்னை: சென்னையில் கடந்த 2 நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று சற்று இறங்கு முகம் கண்டுள்ளது. அதாவது, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.28,888 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.3611க்கும், சவரன் ரூ.28,888க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.50க்கும், ஒரு கிலோ ரூ.50,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக கடும் ஏற்றத்துடன் காணப்பட்டது. கடந்த 4ம் தேதி காலையில் தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக பவுன் ரூ.30,120க்கு விற்கப்பட்டது. இதுவே தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாக கருதப்பட்டது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்றைய தினம் மாலையிலேயே தங்கம் விலை சற்று சரிந்து ஒரு பவுன் ரூ.29,928க்கு விற்கப்பட்டது.

அதன் பிறகு 5ம் தேதி ஒரு பவுன் ரூ.29,928க்கும், 6ம் தேதி ரூ.29,264, 7ம் தேதி ரூ.29,368, 9ம் தேதி ரூ.29,272க்கும், 10ம் தேதி ரூ.29,192க்கும், 11ம் தேதி ரூ.29,072, 12ம் தேதி ரூ.28912க்கும் தங்கம் விற்கப்பட்டது. அதனையடுத்து 13ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.3,612க்கும், பவுன் ரூ.28,896க்கும் விற்கப்பட்டது. பின்னர் 14ம் தேதி தங்கம் விலை சரிவை சந்தித்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.28 குறைந்து ஒரு கிராம் ரூ.3,584க்கும், பவுனுக்கு ரூ.224 குறைந்து ஒரு பவுன் ரூ.28,672க்கும் விற்கப்பட்டது. 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால், அதே விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது. பின்னர் திங்கட்கிழமை தங்கம் மார்க்கெட் தொடங்கிய நிலையில் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. அதாவது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3,626 க்கும் ஒரு சவரன் ரூ.29,008க்கும் விற்பனையானது. அதேபோல், நேற்று சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.29 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலையில் சற்று இறங்கு முகம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Chennai , Chennai, gold, price low, silver
× RELATED அமெரிக்காவில் விளம்பர பலகையால்...