×

பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கோயிலை அகற்ற வேண்டும் : மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:   செம்பியம் திருவிக நகரைச் சேர்ந்த எல்.டி.வில்லியம் மோசஸ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில், தினமும் 3 லட்சம் வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன. 70 அடியாக இருந்த சாலை தற்போது 40 அடிக்கும் குறைவாக குறுகிவிட்டது. எனவே, இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்யுமாறு தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.  மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு 2012ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை மாநகராட்சி அமல்படுத்தாததால் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் மீது வில்லியம் மோசஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெரம்பூர் தாசில்தார் லலிதா, அயனாவரம் தாசில்தார் ஜெயந்தி ஆகியோர் ஆஜராகி சாலையின் அளவு, ஆக்கிரமிப்பு ஆகியவை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தனர்.

அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், அடுத்த விசாரணைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் சில இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது என்று கூறி புகைப்படங்களை தாக்கல் செய்தார். அப்போது, மனுதாரர் தரப்பு வக்கீல் டி.எஸ்.ராஜமோகன் ஆஜராகி ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் சன்ஷேட் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், வீனஸ் தியேட்டர் எதிர்புறம் உள்ள கோயில் ஆக்கிரமிப்பில் உள்ளதே அதை ஏன் அகற்றவில்லை என்று பெரம்பூர் மற்றும் அயனாவரம் தாசில்தார்களிடம் கேட்டனர்.

அதற்கு, மாநகராட்சி தரப்பு வக்கீல், தண்டுமாரியம்மன் கோயிலுக்கு 9 பேர் டிரஸ்டிகளாக உள்ளனர். அவர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த கோயிலில் உள்ள சிலைகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்தும் அதன்பிறகு கோயிலை இடிப்பது குறித்தும் சம்பந்தப்பட்ட கோயில் டிரஸ்டிகளுக்கு மாநகராட்சி புதிய நோட்டீசை அனுப்ப வேண்டும். கோயில் டிரஸ்டிகள் நோட்டீஸ் உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் மாநகராட்சி கோயிலை இடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு வரும் 29ம் தேதி தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Tags : Removal of the Temple, Perambur Paper Mills Road
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...