×

குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தீர்ப்பு தாமதம்: 10,000 வழக்குகளில் 268 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு..!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 10 ஆயிரம் போக்சோ வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் 268 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ நீதிமன்றங்களில் போதுமான நீதிபதிகள் இல்லாததே வழக்கு விசாரணையில் காலதாமதம் ஏற்பட காரணம் என்று கூறும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் போதிய நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக 2019-ம் ஆண்டில் 1,742 போக்சோ வழக்குகளும், 654 பிற  வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. அதேபோல 20210-ம் ஆண்டில் 2,229 போக்சோ வழக்குகளும், 861 பிற வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. நடப்பாண்டில் ஜூன் மாதம் வரையில் 1,252 போக்சோ வழக்குகளும், 420 பிற வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. கடந்த 2.5 ஆண்டுகளில் 10,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், தற்போது வரை 268 பேருக்கு மட்டுமே தண்டனை கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்களை கொண்டு விவரிக்கிறார் குழந்தைகள் நல ஆர்வலர் கனிகா.

போக்சோ  வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி போக்சோ நீதிமன்றங்கள் இருக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் மட்டுமே தனி போக்சோ நீதிமன்றங்கள் உள்ளன. மற்ற மாவட்டங்களில் மகளிர் நீதிமன்றங்களோடு சேர்ந்தே இருப்பதால் இருப்பதால் வழக்கு விசாரணையில் மிகுந்த தாமதம் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பார்கள். அதுவும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க விரைவான தீர்ப்பு வழங்கப்பட வேண்டியது அவசியம். எனவே போக்சோ வழக்குகளை விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும் தனி நீதிமன்றம் அமைத்து நீதிபதிகளை முறையாக நியமிக்க வேண்டும் என்பது குழந்தைகள் நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


Tags : Delay in verdict in criminal cases against children: Judgment in only 268 out of 10,000 cases ..!
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு...