48 நாட்களுக்கு பிறகு அத்திவரதரை மீண்டும் குளத்திற்கு அடியில் வைக்கக் கூடாது :ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கோரிக்கை

காஞ்சிபுரம் : அத்திவரதரை மீண்டும் குளத்திற்கு அடியில் வைக்கக் கூடாது என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜீயர் கோரிக்கை விடுத்துள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்திவரத பெருமாள் பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை அத்திவரதர் தரிசனத்திற்கு கோயில் நிற்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.அந்த வகையில் 1979ம் ஆண்டுக்கு பின்னர் இந்தாண்டு ஜூலை 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். இதனிடையே அத்திவரதர் முதல் 24 நாட்கள் சயனகோலத்திலும் அடுத்த 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதையடுத்து 48 நாட்கள் பூஜைக்கு பிறகு, மீண்டும் அத்திவரதரை குளத்திற்குள் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அத்திவரதரை மீண்டும் குளத்திற்கு அடியில் வைக்கக் கூடாது என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜீயர் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய சடகோப ராமானுஜ ஜீயர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் திருட்டிற்கு பயந்து அத்திவரதரை நீருக்கு அடியில் வைத்ததாக அவர் கூறினார். 40 ஆண்டுகளுக்கு பிறகு வெளியில் வந்த அத்திவரதரை மீண்டும் புதைக்கத் தேவையில்லை என்று ஜீயர் தெரிவித்திருக்கிறார். அத்திவரதரை பூமிக்கு அடியில் புதைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி அனைத்து மடாதிபதிகளும் முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கப் போவதாக சடகோப ராமானுஜ ஜீயர் கூறியிருக்கிறார். அத்திவரதர் வெளியில் இருந்தால், காஞ்சிபுரம் 2வது திருப்பதியாக மாறும் என்றும் அவர் கூறியுள்ளார்.   


Tags : Catakopa ramanuja Jeer, Chief palanicami, attivaratar, Varatharaja Perumal
× RELATED சென்னகேசவ பெருமாள் கோயில் இடத்தில்...