×

கோடியை எட்டியது டன் விலை.. சந்தன மரம் வளர்ப்பதை ஊக்குவிக்குமா வனத்துறை: தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதி அதிகரிப்பு

சேலம்:  தமிழகத்தில் உள்ள வனத்துறை சந்தனக்கிடங்கில் சந்தனக்கட்டை ஏலம் விடுவது நிறுத்தப்பட்டுள்ளதால், ஒரு டன் சந்தனக்கட்டையின் விலை கோடியை தாண்டியுள்ளது. இதனால் சந்தன மர வளர்ப்பை வனத்துறை ஊக்குவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்திய மரங்களிலேயே மிகவும் விலை உயர்ந்தது சந்தன மரம். மரத்தங்கம் எனப்படும் சந்தன மரம் இந்தியாவை தாயகமாகக் கொண்டது. தமிழக வனப்பகுதியில் காலம், காலமாக வளர்ந்து வருகிறது. மருந்தாகவும், நறுமணப் பொருளாகவும் பயன்படும் சந்தனத்தின் உலகத் தேவையில் சுமார் 70 சதவீதத்தை இந்தியாவே ஈடு செய்கிறது. நாட்டின் கிழக்குப் பகுதியில் சந்தனம் விளைந்தாலும், இது வறட்சியை தாங்கி விளையக் கூடிய மரம் என்பதால் இயல்பாகவே தென் பகுதிக்கு உட்பட்ட கர்நாடகம், தமிழகம், கேரள வனப்பகுதிகளில் அதிகளவில் வளருகிறது.

சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள மண்,கால நிலை ஆகியவை சந்தன மரங்களின் வளர்ச்சிக்கு உகந்தவை என்று ஆய்வில் தெரிய வந்ததுள்ளது. எனவே தான் மேற்கு தொடர்ச்சி மலைகளைப் போன்றே சித்தேரி மலை, கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, சேர்வராயன் மலை, பச்சமலை, பால மலை போன்ற கிழக்கு தொடர்ச்சி மலை பாதைகளிலும் இது நன்கு வளருகிறது. வைரம் பாய்ந்த கட்டைகளில் இருந்து கிடைக்கும் வாசனை எண்ணெய்யின் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வணிக ரீதியில் சந்தனம் வளர்க்கப்படுவது ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. உலளவில் ஆஸ்திரேலியா சந்தனம்,இந்திய சந்தனம் என இரு வகைகள் இருந்தாலும், 8 சதவீதம் வரையிலும் எண்ணை தன்மை இருப்பதால் இந்திய சந்தன மரங்களுக்கு சர்வதேச சந்தையில் கூடுதல் விலை கிடைக்கிறது. 1980ம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் வனப்பகுதிளிலும், தனியார் நிலங்களிலும் ஏராளமான சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டன.இந்த மரத்தை புனித மரமாகவே மலை வாழ் மக்களும், கிராம மக்களும் கருதி பாதுகாத்து வந்தனர்.

மேலும் இயற்கையாக விழுந்து கிடக்கும் மரங்களையே வனத்துறையினர் சேகரித்து திருப்பத்தூர்,சேலம்,சத்தியமங்கலம் பகுதிகளில் உள்ள சந்தன மரக் கிடங்குகளில் பாதுகாத்து வருகின்றனர். சேவு எனப்படும் ஹார்ட் உட் பகுதி வளருவதற்கு, அதாவது சந்தன எண்ணை கிடைப்பதற்கு ஒரு மரத்துக்கு 20 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் சந்தன மரத்துக்கு அதிக விலை கிடைக்கிறது என்பதால் எந்த பகுதி பயன்படக் கூடியது என்பதை அறியாமல் இளம் வயது நாற்றுகள் வரையிலும் வெட்டப்பட்டு விட்டதால் தமிழக காடுகளில் இருந்து பெரும்பான்மை சந்தன மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. சேலம் சந்தன கிடங்கில் அதிகபட்சமாக 250 டன் சந்தனக் கட்டைகள் உள்ளன. இங்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஏலத்தில் ஒரு டன் சந்தன கட்டை ₹1 கோடிக்கு ஏலம் போனது. இதை தொடர்ந்து இந்த கிடங்கில் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் மாநிலத்திலேயே சந்தனக் கட்டைகள் இல்லாத நிலை உருவாக உள்ளது.

உலகத்திற்கே சந்தனத்தை வழங்கி வந்த நாம், நம்முடைய தேவைக்காக ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.ேதவை அதிகரித்து விட்ட நிலையில்,மரம்வளர்ப்பு மிகவும் குறைந்து விட்டது. சந்தன மரங்களின் விலையும் மிகவும் அதிகரித்து விட்டது. இதனால் சந்தன மரத்தை தனியார் நிலங்களில் வளர்க்கும் திட்டத்தை வனத்துறையினர் ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்ைக சமீபகாலமாக வலுப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘1980ம் ஆண்டுகளில் ஒரு டன்னுக்கு ₹20 ஆயிரமாக இருந்த சந்தனக்கட்டை விலை, தற்போது, ₹1 கோடியாக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் ஆண்டுக்கு 10 ஆயிரம் டன் சந்தனம் தேவைப்படுகிறது. இதனால் தனியார் நிலங்களில் சந்தன மரத்தின் வளர்ப்பை ஊக்குவித்து வருகிறோம்,’’ என்றனர்.

காப்பாற்றுவது சிரமம் கமிஷனும் கொடுக்கணும்
‘‘தனியார் நிலங்களில் சந்தன மரங்கள் வளர்ப்பதை, 2002ம் ஆண்டு முதல் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதனால் சேலம்,நாமக்கல்,தர்மபுரி உள்பட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சந்தன மர வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். சந்தன மரங்கள் அடுத்த தலைமுறைக்கு மட்டும் பயன்படக்கூடிய நீண்ட பயிர்கள் என்பதால், பெரும்பாலான விவசாயிகள் மர வளர்ப்பில் ஆர்வம் காட்டவில்லை. இதேபோல் கடத்தல்காரர்களிடம் இருந்து மரத்தை காப்பாற்றுவதும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.மேலும்,சந்தன மரங்களை விவசாயிகள் தாமாகவே விற்பனை செய்ய முடியாது என்பது மிகப்பெரிய தடைக்கல்லாக கருதப்படுகிறது. விற்பனை விலையில் 20 சதவீதத்தை அரசுக்கு செலுத்த வேண்டும். 80 சதவீதம் மட்டும் விவசாயிகளுக்கு சேரும். இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டால் மட்டுமே எங்களால் சந்தன மரத்தை வளர்க்க முடியும்,’’என்கின்றனர் விவசாயிகள்.


Tags : Crores, tons of sandalwood, forestry
× RELATED சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு...