×

தாமிரபரணி தண்ணீர் மாசுபடுவதை தடுக்க பாபநாசத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம்

நெல்லை :  பாபநாசத்தில் தாமிரபரணி தண்ணீர் மாசுபடுவதை தடுக்கும் வகையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து சுத்திகரிப்பு  நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகிறது. பாபநாசம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நெல்லை, வைகுண்டம், ஏரல் வழியாக 136 கி.மீ. பயணம் செய்து புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆறு விவசாய தேவையை நிறைவு செய்வதுடன் மட்டுமல்லாது நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 3 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. ஆனால் தாமிரபரணி ஆறு பல்வேறு இடங்களில் கழிவுநீர், குப்பைகள் ஆகியவை கலப்பதால் மாசுபட்டு வருகிறது.

குறிப்பாக தாமிரபரணி ஆறு ஓடி வரும் பாபநாசத்திற்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக வரும் பலர் தங்களது உடைகள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றை  அப்படியே ஆற்றில் விட்டுச் செல்கின்றனர். அவை நாள் கணக்கில் ஆற்றில் தேங்கி மாசு ஏற்படுகிறது. மேலும் ஆற்றில் சோப்புகளை பயன்படுத்தி சலவை செய்தல், குளிக்க சோப்பு, சாம்பு ஆகியவை பயன்படுத்துவதால் தாமிரபரணி தண்ணீர் மாசு அடைகிறது. இவ்வாறு மாசுபடுவதை தடுக்கவும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின் படி, நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆலோசனையின் பேரில் பாபநாசம் தலையணை பகுதி, அய்யா கோயில் எதிர்புறம், பாபநாசம் கோயில் எதிரில்  உள்ள படித்துறை மற்றும் வடக்கு கோடை மேலழகியான் நீர் போக்கு கால்வாய்கள்  ஆகியவற்றை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் காளிமுத்து, மத்திய அரசின் பாபா அணு ஆய்வு மையத்தின் முதுநிலை விஞ்ஞானி டேனியல் செல்லப்பா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் தாமிரபரணி ஆற்று தண்ணீரை சுத்திகரித்து அனுப்ப சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட நிர்வாகமும் ஆய்வு நடத்தி பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்கு அறிக்கை அளித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு விரைவில் ஆய்வு நடத்தி சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்ப பரிந்துரை அளிக்க உள்ளது. முதலில் ஒரு பகுதி தண்ணீரை சுத்திகரிக்கவும், அந்த திட்டத்தின் செயல்பாட்டை பொறுத்து விரிவாக்கவும் செய்யுவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை, பொதுப்பணித் துறையுடன் இணைந்து இந்த திட்டத்தை விகேபுரம் நகராட்சி செயல்படுத்த உள்ளது.


Tags : thamirabharani ,papanasam ,refinery
× RELATED தை அமாவாசையை யொட்டி பாபநாசம், குற்றாலத்தில் திரளானோர் தர்ப்பணம்