×

தை அமாவாசையை யொட்டி பாபநாசம், குற்றாலத்தில் திரளானோர் தர்ப்பணம்

வி.கே.புரம் : தை அமாவாசையை யொட்டி பாபநாசம், குற்றாலத்தில் ஏராளமானோர் புனித நீராடி தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.இறந்த மூதாதையர்களுக்கு தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் எள்ளும், நீரும் இறைத்து இந்துக்கள் வழிபடுவது வழக்கம். கடந்த 2 ஆண்டு காலமாக பாபநாசம், தாமிரபரணி ஆற்றில் இறந்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக நேற்று பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் வழக்கமாக பாபநாசம் படித்துறையில் தான் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

இந்த ஆண்டு பாபநாசம் படித்துறையில் தர்ப்பணம் கொடுப்பது தடை செய்யப்பட்டு, பாபநாசம் யானைப்பாலம் அருகே உள்ள முக்கூடல் பகுதியிலும், தலையணைக்கு செல்லும் வழியில் உள்ள அய்யா கோயில் அருகிலும் தர்ப்பணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் இந்த 2 இடங்களிலும் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.
போக்குவரத்திலும் சிறிது மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அனைத்து தனியார் வாகனங்களையும் டானாவில் சோதனை சாவடி அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அங்கிருந்து நடந்து சென்று தர்ப்பணம் செய்ய அனுமதித்தனர். அரசு போக்குவரத்து வாகனங்கள் பாபநாசம் பணிமனை வரை செல்ல அனுமதிக்கப்பட்டன. அதுபோல் உலகம்மை சமேத பாபநாசம் சுவாமி கோயில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அம்பை டிஎஸ்பி பிரான்சிஸ் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் செய்திருந்தனர். புலிகள் கணக்கெடுப்பு பணி நடப்பதால் காரையாறு சொரிமுத்தைய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாளை (2ம் தேதி) முதல் அங்கு பக்தர்கள் செல்லலாம் என வனத்துறை அறிவித்துள்ளது.

தென்காசி: தை அமாவாசையை யொட்டி நேற்று அதிகாலையிலேயே ஏராளமானோர் குற்றாலம்  மெயின் அருவியில் புனித நீராடினர். பின்னர் அருவிக்கரை பகுதியில் வரிசையாக  அமர்ந்திருந்த அர்ச்சகர்கள் முன்னிலையில் எள்ளையும் தண்ணீரையும் ஆற்றில்  விட்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக வெயில்  அடித்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது.

சங்கரன்கோவிலில் பக்தர்கள் அவதி

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலின் நாகசுனை தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி, தை, மற்றும் ஆடி அமாவாசையின் போது பொதுமக்கள் தர்ப்பணம் செய்வார்கள். இதற்கான முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகமும், பாதுகாப்பு பணிகளை காவல்துறையினரும் செய்து கொடுப்பார்கள்.

ஆனால் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு கோயில் நாகசுனை தெப்பக்குளத்தில் அதிக அளவு தண்ணீர் இருந்தும் கோயில் நிர்வாகம் தர்ப்பணம் செய்வதற்கான முன்னேற்பாடுகளை செய்யவில்லை. இதனால் தர்ப்பணம் செய்வதற்காக அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து தெற்குரத, வீதி, சுவாமி சன்னதியில் உள்ள புரோகிதர்களின் வீடுகளுக்குச் சென்றனர். அவர்கள் தங்கள் வீடுகளின் முன்பு தர்ப்பணம் செய்து கொடுத்தனர். இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாது புரோகிதர்களும் பெரும் அவதிக்குள்ளாயினர்.

Tags : Amavasa ,Yotti Babanasam ,Dhulanor , VKpuram: On the eve of the Thai New Moon, many people in Papanasam and Courtallam took holy bath and paid homage to their ancestors.
× RELATED குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்