×

இன்ஜினியரிங் ஆன்லைன் கலந்தாய்வில் முறைகேடு நடைபெறவில்லை: தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தகவல்

சென்னை: இன்ஜினியரிங் ஆன்லைன் கலந்தாய்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் இன்ஜினியரிங் கலந்தாய்வு இணையதளம் மூலம் நடந்து வருகிறது. இந்நிலையில் தனியார் கல்லூரி ஒன்றின் பெயரில் ஒரு மாணவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள்,  மாணவரின் இன்ஜினியரிங்  கவுன்சலிங்  யூசர் ஐடி, பாஸ்வேர்டு பெற்று குறிப்பிட்ட கல்லூரி நிர்வாகத்தின்கீழ் செயல்படும் 2 கல்லூரிகளில் மட்டும் சேரும் வகையில் சீட் தேர்வு செய்து லாக் செய்துவிட்டதாக மாணவர், அவரின் தந்தை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திடம்  புகார் தெரிவித்தனர். தங்கள் கல்லூரியின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்கான முயற்சி இது என குறிப்பிட்ட கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து அந்த மாணவருக்கு மீண்டும் விருப்ப கல்லூரி பட்டியல் பதிவேற்றம் செய்ய தொழில்நுட்ப கல்வி  இயக்ககம் அனுமதி அளித்தது. இந்நிலையில் இன்ஜினியரிங் ஆன்லைன் கலந்தாய்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தொழில்நுட்க கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: இன்ஜினியரிங் கலந்தாய்வில் முறைகேடு என வெளியான தகவல்கள் உண்மை அல்ல. இணையதள பொறியியல் கலந்தாய்வு 100 சதவீதம் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து வருகிறது.

எந்தவித முறைகேட்டிற்கும் இடமில்லை. பல்வேறு  பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழுவினர் சுழற்சி முறையில் மிகத் துல்லியமாக கலந்தாய்வை கண்காணித்து வருகின்றனர். புகார் இருந்தால் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் புகார் மையத்தில் 2235  1014, 2235 1015 ஆகிய எண்களில் மாணவர்கள் தகவல் தெரிவிக்கலாம். tnea2019enquiry@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும் மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம்.மாணவர்கள் தங்களின் இன்ஜினியரிங் கலந்தாய்வு யூசர் ஐடி, பாஸ்வேர்டை யாரிடமும் வழங்கக்கூடாது. சான்றிதழ் சரிபார்ப்பின்போது யூசர் ஐடி, பாஸ்வேர்டை யாரிடமும் தெரிவிக்க மாட்டோம் என்று உறுதிமொழி படிவத்தில் மாணவர்,  பெற்றோர் கையெழுத்திட்ட பின்னரும், சிலர் இதை கடைபிடிக்கவில்லை. ஏதேனும் சந்தேகம் இருந்தால் மாணவர்கள், தாங்கள் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள இன்ஜினியரிங் சேர்க்கை உதவி மையத்துக்கு சென்று வழிகாட்டுதல்களை  பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Engineering, Online ,Consultation, Technical Education, Directorate
× RELATED ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்