×

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆன்லைன் சூதாட்டம் என்ற ஆக்டோபஸின் கொடுங்கரங்களுக்குள் சிக்கிய வேலுச்சாமி என்ற இளம் காவலர் நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார். அவர் விரைவில் உடல்நலம் தேற விழைகிறேன். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நிகழும் 2வது விரும்பத்தகாத சம்பவம் இதுவாகும். இத்தகைய கொடுமைகளும் சோகங்களும் இனியும் நடக்காமல் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அதற்கான ஒரே தீர்வு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டத்தை இயற்றுவதே ஆகும்.

ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால் ஏராளமான இளைஞர்கள் சொந்த பணத்தையும் கடன் வாங்கிய பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து தற்கொலை செய்துகொள்வதை தடுக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை 25க்கும் அதிகமாகும். நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்றுவதுதான் இதற்கு தீர்வாகும். இதை சென்னை உயர் நீதிமன்றமும் இரு தருணங்களில் உறுதிசெய்திருக்கிறது. எனவே இனியும் தாமதிக்காமல் திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட முன்வரைவை நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


Tags : Online Rummy Prohibition Act Enforced: Ramadas Insist
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...