×

3150 கிராமங்களில் நீரின் தன்மையை அறிய ஆய்வு... தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை

ராமநாதபுரம்: மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பருவமழை பெய்யவில்லை. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து கிழே இறங்கிவிட்டது. பல கிராமங்களில் கிணறுகள், போர்வெல்கள் வறண்டு விட்டன. வசதி படைத்தவர்கள் கேன், பாட்டில்களில் விற்பனையாகும் நீரை வாங்கி குடிக்கின்றனர். கிராமங்களில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் வரும் வழிகளில் உடைப்பு ஏற்பட்டு கசிந்தோடும் தண்ணீரை எடுத்தும் கண்மாய், ஊரணிகளில் ஊற்று தோண்டி சிறுக சிறுக ஊறும் தண்ணீரை எடுத்து குடிக்கின்றனர். மழை இல்லாத நிலையிலும், மண்ணின் தன்மை மாறுபட்டதாலும் நிலத்தடி நீரின் தன்மை சுவை குறைந்து உப்பாக மாறி வருகிறது. இந்த நீரை குடித்தால் சிறுநீரக கோளாறு உள்பட பல வியாதிகள் வரும் என தெரிவிக்கின்றனர். மாவட்ட அளவில் 429 ஊராட்சிகளுக்கு தினசரி 80 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால், காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 33 மில்லியன் லிட்டர் வரையே வழங்கப்படுகிறது. மீதமுள்ள குடிநீர் உள்ளூா் நிலத்தடிநீர் ஆதாரங்கள் மூலமே பெறப்படுகின்றன. பெரும்பாலான கிராமங்களில் நிலத்தடி நீர் 50 முதல் 150 அடிக்கு கீழே சென்றுவிட்டது. நிலத்தடியில் சுமார் 50 அடிவரை நீரற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் கூறுகின்றனர்.

50 அடிக்கும் கீழே ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நீர் எடுக்கும் நிலையில், அவை குடிக்க உகந்த நிலையில் இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நிலத்தடி மற்றும் காவிரிக் கூட்டுக்குடிநீர் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய ராமநாதபுரம் அருகே ஓம்சக்திநகர் பகுதியில் ஆய்வகம் செயல்படுகிறது. இங்கு குடிநீரை ஆய்வு செய்ய வீடுகளுக்கு ரூ.1000, கட்டிடப் பணிகளுக்கு ரூ.2 ஆயிரம் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி நீரில் உள்ள கார, அமிலத் தன்மை, பாக்டீரியா போன்ற தொற்றுகள் குறித்து 21 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் நீலத்தடி நீரில் 200 மில்லி கிராம் முதல் ஆயிரம் மில்லி கிராம் வரை இருக்க வேண்டிய குளோரைடு அளவும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
உப்புத்தன்மையும், குளோரைடும் கூடுதலான நிலையில், ‘அந்த நீரை குடிப்பவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்டவை நோய்கள் ஏற்படும் என தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இந்த மாதம் முதல் வரும் 2020ம் ஆண்டு மார்ச்சுக்குள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 3150 கிராமங்களில் நிலத்தடி நீரின் தன்மையை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நீர் பகுப்பாய்வகம் மூலம் 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். ராமநாதபுரத்தில் அரசு சார்பில் நிலத்தடி நீரை குடிக்க ஏற்றவையா என பரிசோதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களும் தாங்கள் பயன்படுத்தும் தண்ணீரை குடிக்க உகந்ததா என கட்டணம் செலுத்தி பரிசோதித்துக் கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரத்துக்கு வரும் காவிரிக் கூட்டுக்குடிநீர் குழாய்கள் தினமும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். அந்த இடங்களில் உள்ள கழிவுகள் நீரில் கலக்கின்றன. மேலும் தேங்கிய நீரில் அப்பகுதி மக்கள் குளிக்க துணிகள் துவைக்க பயன்படுத்துகின்றனர். அசுத்தமாகி உள்ள தண்ணீர் மீண்டும் குழாய் உள்ளே செல்கிறது. இந்த நீரை சுத்திகரிக்காமல் குடிக்கும்போது பலவிதமான நோய்கள் வரும் வாய்ப்புகள் உள்ளது. தண்ணீரில் உள்ள கிருமிகளை அழிக்க பிளீச்சிங் பவுடர் கலக்கப்படுகிறது. பெரும்பாலன வீடுகளில் கிணறு மற்றும் போர்வெல்லில் இப்பவுடரை தண்ணீரில் கலந்து ஊற்றி விடுகின்றனர். இதுபோல கலக்கக் கூடாது என்றும் பிளீச்சிங் பவுடரை நீரில் கரைத்து அதை வடிகட்டி பின்னர் அந்த நீரை கிணறு போர்வெல்லில் ஊற்ற வேண்டும். பவுடராகக் கலப்பதால் நீரை குடிப்பவர்களுக்கு கால்சியம் போன்றவற்றால் சிறுநீரகப் பாதிப்பு போன்றவை ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பொதுமக்கள் கூறுகையில், ‘மாவட்டத்தில் நிலத்தடி நீர் இல்லை, காவிரி குடிநீரை நம்பியே மாவட்ட மக்கள் உள்ளனர். பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் தேங்கி வைக்கப்படும் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுத்தம், சுகாதாரமான முறையில் உள்ளதா என நடமாடும் பரிசோதனை மூலம் கிராமங்கள், தெருக்களில் இலவசமாக ஆய்வு நடத்த வேண்டும். தனிநபர்களின் போர்வெல் கிணறுகள் தண்ணீரை பரிசோதிக்க குறைந்த அளவு கட்டணம் வசூலிக்க வேண்டும்’ என்றார்.

Tags : Ramanathapuram, Drinking Water
× RELATED திருப்புத்தூர் அருகே கண்மாய்...