×

வீட்டு வாசலுக்கே வந்து ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை: நெல்லை, தூத்துக்குடியில் மீண்டும் தலைதூக்கும் கந்துவட்டி கொடுமை

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கும் கந்துவட்டி பிரச்னைகளால் பொதுமக்கள் திண்டாட்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர். முக்கிய சந்திப்புகளிலும், தெருக்களிலும் கந்து வட்டிக்காரர்களின் நேரடி மிரட்டலை கட்டுப்படுத்த காவல்துறை முன்வர வேண்டும். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கந்துவட்டியின் தாக்கம் அதிகம். போதிய வேலைவாய்ப்புகள் இன்றி தவிக்கும் இளைஞர்கள் தொழிலின் பொருட்டும், சிறு குறு தொழிலாளர்களுக்கு தங்கள் முதலீடுகளுக்கும், பண தேவைகளுக்கும் கந்துவட்டிக்காரர்களை நாடுகின்றனர். 5 ஆயிரம், 10 ஆயிரத்தில் தொடங்கும் கடன் மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என உயர்ந்து ஒரு காலக்கட்டத்தில் லட்சக்கணக்கில் கடனாளிகளாக பொதுமக்கள் மாறிவிடுகின்றனர்.

நெல்லை, தூத்துக்குடியில் தொழிலாளர்கள் தங்கள் பணியாற்றும் வேலையின் நிமித்தம் கந்துவட்டிகள் மாறுபடும். மார்க்கெட்டுகளில் காலையில் கடன் பெற்று இரவில் அடைக்க வேண்டும். சிலர் வார கணக்கிலும், சிலர் மாதக்கணக்கிலும் கடன் பெற்று வட்டி கட்ட வேண்டும். முதலீடு அடிப்படையில் காலையில் ரூ.900 கடன்பெற்று இரவு நேரத்தில் அதை ஆயிரமாக திருப்பி கொடுப்போரும் உண்டு. தமிழகத்தில் 7 லட்சம் பீடி தொழிலாளர்கள் உள்ள நிலையில், அவற்றில் நெல்லை மாவட்டத்தில் மட்டுமே 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பீடி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் தொழில் முதலீட்டுக்கு கந்து வட்டிக்காரர்களையே முதலில் நாடுகின்றனர். 1000 பீடிகளுக்கு ரூ.95 முதல் 105 வரை கூலியாக பீடித்தொழிலாளர்கள் பெறுகின்றனர். இவர்கள் பல்வேறு காரணங்களால் பீடிக்கம்பெனிகளுக்கு கொடுக்கவேண்டிய பீடிகளை கொடுக்கமுடியாத நிலை ஏற்படுகிறது. அப்போது கந்துவட்டிக்காரர்களிடம் கடன் பெற்று காலம் முழுக்க கடனில் உழல்கின்றனர்.

நெல்லையை பொறுத்தவரை டீ கடை, பெட்டி கடை என சிறுவணிகம் செய்வோர் கையில் நோட்டோடு திரியும் கந்து வட்டிக்காரர்களிடம் முதலில் 2 ஆயிரம் கடன் பெறுகின்றனர். அதை மெல்ல மெல்ல அடைக்க முயன்று முடியாதபோது, அத்தொகையே 20 ஆயிரம், 40 ஆயிரம் என ஏறிகொண்டே செல்கிறது. ஜவுளி வியாபாரம், தங்க நகை என பெரும் முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கில் கந்துவட்டிக்காரர்களிடம் கடன் பெறுகின்றனர். ஒருக்காலக்கட்டத்தில் அதற்கான தொகை 5 லட்சம், 10 லட்சம் என எகிறும்போது வாழ்க்கையை வெறுத்து தற்கொலை முடிவுக்கும் தள்ளப்படுகின்றனர். சில வியாபாரிகள் கந்துவட்டிக்காரர்களுக்கு கொடுக்க பணமின்றி சிறுக சிறுக சேர்த்து செய்த கம்மல், மூக்குத்தி, தாலிச்செயினையும் கூட இழக்கின்றனர்.

இதனால் குடும்பத்திற்குள் பூசல் உருவாகி இறுதியில் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் அவலமும் நெல்லையில் அரங்கேறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு பாளையில் ஒரு குடும்பமே கந்துவட்டி காரணமாக தற்கொலை செய்து கொண்டது. நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டியின் உச்சபட்ச ேகாரம் என கருதப்படுவது கலெக்டர் அலுவலகத்தில் காசிபிள்ளை தர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் குடும்பத்தோடு செய்து கொண்ட தற்கொலையே ஆகும். தனது மனைவி, குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிவிட்டு தன் மீதும் தீ வைத்து கருகிய அந்த கோர சம்பவம் தமிழக அளவில் கந்து வட்டியின் கொடுமையை பேச வைத்தது.

இந்த சம்பவத்திற்கு பிறகு நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டிக்காரர்கள் தலைமறைவாயினர். இந்நிலையில் மீண்டும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கந்துவட்டிக்காரர்கள் வேட்டியை மடித்து கட்டி கொண்டு, வட்டி நோட்டுக்களை கையில் வைத்து கொண்டு திரிகின்றனர். பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வட்டி கட்டாதவர்களை மனம் போன போக்கில் திட்டுவதும், வீட்டுக்கே சென்று தெருவில் நின்று கொண்டு அடாவடி செய்வதும் நடந்து வருகிறது. நெல்லையில் தற்போது கேடிசி நகர், சாந்திநகர், அரியகுளம், சுத்தமல்லி, தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லநாடு, கோவில்பட்டி பகுதிகளிலும் இத்தகைய அராஜக சம்பவங்கள் அரங்கேறி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வட்டிக்கு கடன் வாங்கிய பல பாவப்பட்ட குடும்பங்கள் செய்வதறியாது விழிக்கின்றன. கடனை அடைக்க கால அவகாசம் கேட்டாலும் கந்துவட்டிக்காரர்கள் கொடுக்க முன்வருவதில்லை. எனவே மீண்டும் உயிர்பலி ஏற்படும் முன் காவல்துறை கண்விழிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Paddy, Tuticorin, Kanduvatti cruelty
× RELATED அறுவடைக்கு தயாரான நிலையில் 60 ஏக்கர்...