×

திருவொற்றியூரில் அடிக்கடி மின் தடை அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலை மறியல்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பல மணி நேரம் மின் தடை செய்யப்படுவதால் நோயாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தூங்க முடியாமலும், மாணவ, மாணவியர் படிக்க முடியாமலும் சிரமப்படுகின்றனர். இதனால், மின்தடை ஏற்பட்டால் புழுக்கம் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வாசல்களில் பல மணி நேரம் அமர்ந்து கண் விழித்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இந்நிலையில் திருவொற்றியூர் பீர் பயில்வான் தர்கா தெரு, பி.சதானந்தபுரம், தியாகராயபுரம் போன்ற பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டபோது, முறையான பதிலளிக்கவில்லை, என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை தாங்கல் தெரு அருகே எண்ணூர் விரைவு சாலையில் திரண்டு, அடிக்கடி ஏற்படும் மின் தடை பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்காத மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பிரச்னை தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Thiruvottiyur, people ,pick, road ,denounce, power restrictions
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...