×

வெடி விபத்து, விஷவாயு தாக்கி உயிரிழந்த 12 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் எடப்பாடி உத்தரவு

சென்னை: வெடி விபத்து மற்றும் விஷவாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர்,  நெமிலி மெயின் ரோடு, விநாயகா நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி 26.3.2019 அன்று சொந்த வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியபோது, விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.

அவரை காப்பாற்ற சென்ற மகன்கள் கார்த்தி மற்றும் கண்ணன், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பரமசிவம், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுரதாபிசி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமிகாந்தன் ஆகிய 6 பேர் உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மன்னை நகரில் இயங்கி வரும் தனியார் வெடிபொருள் உற்பத்தி கூடத்தில் 27.3.2019 அன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த சிங்காரவேல், வீரையன், மோகன், பாபு, சுரேஷ் மற்றும் அறிவுநிதி ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : explosion , 12 people,killed, Rs 1 lakh , Chief Minister Edappadi
× RELATED பட்டாசு வெடித்ததில் 2 வீடுகள் நாசம்: பாஜ வேட்பாளர் மீது வழக்கு