×

மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடக்கம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதன்படி மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று திமுக சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. ஆனால் எந்த உத்தரவையும் பின்பற்றாத தமிழக அரசு, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வார்டு மறுவரையறை செய்து தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்தது. அதன்பின்னர் ஒவ்வொரு முறையும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதெல்லாம், வார்டு மறுவரையறை செய்த பின்னர் தேர்தல் நடத்த உள்ளதாக என்று தமிழக அரசு தெரிவித்து வந்தது.இதற்கிடையில் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து 2017 ஜனவரி முதல் ஜூன் வரை முதல் முறையும், 2017 ஜூன் முதல் டிசம்பர் வரை 2வது முறையும், 2018 ஜனவரி முதல் ஜூன் வரை 3வது முறையும், 2018 ஜூலை முதல் டிசம்பர் வரை 4 வது முறையும், 2019 ஜனவரி முதல் ஜூன் வரை 5வது முறையும் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது மே மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக உறுதி அளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையராக இரா.பழனிசாமி நியமிக்கப்பட்டார். இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாத கால அவகாசம் வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோரை நியமனம் செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையின் ஆணையர் மாநில தேர்தல் அலுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதைத் தவிர்த்து வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொள்ள பிடிஓக்களை பஞ்சாயத்து தேர்தல் பதிவு அலுவலர்களாக நியமனம் செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : State ,Elections , State ,District ,Election Officers, State Election ,Commission
× RELATED மக்களவை தேர்தலில் படுதோல்வியை...