முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்: ஐகோர்ட் அறிவுறுத்தல்

முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வணிகத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், சமூகத்தில் பிரச்னைகளை உருவாக்கும் தகவல்கள் பரவாமல் தடுக்கும் நோக்கில் பொறுப்புடன் செயல்படும்படி சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முகநூல், வாட்ஸ்அப், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தங்களை பயன்படுத்துவோரின் ஆதார் எண்ணை அவற்றுடன் இணைக்க உத்தரவிடக்கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதன் மீதான விசாரணையின் போது, தாங்கள் கேட்கும் தகவல்களை சமூக வலைத்தளங்கள் முழுமையாக வழங்குவதில்லை என சைபர் க்ரைம் காவல்துறை தெரிவித்தது.

மின்னஞ்சல் வழியாகவே காவல்துறை தகவல்களை கேட்பதால் அவற்றை வழங்குவதில் சிக்கல் இருப்பதாக சமூக வலைத்தளங்கள் தரப்பில் கூறப்பட்டது. உயரதிகாரிகள் கேட்டால் தகவல்களை வழங்கலாம் என்றும், இந்த பிரச்னைக்கு தீர்வு காண தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ட்ராய் விதிகளை உருவாக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது. அதனைக் கேட்ட நீதிபதிகள், சமூக வலைத்தளங்களிடம் இருந்து காவல்துறை தகவல்களை பெற ஏதுவாக குழு அமைக்கலாமா? என கேள்வி எழுப்பியதுடன், சமூக வலைத்தளங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED வாட்ஸ் ஆப் செயலியை Update செய்ய அறிவுறுத்தல்