×

தமிழகத்தில் குறைவான வாக்குப்பதிவான தென் சென்னை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்த ரூ.1 கோடி வீண்: 2014 தேர்தலை விட 4 சதவீதம் குறைவு

சென்னை: மக்களவை பொதுத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதனால் சென்னை மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காக செலவு செய்த ₹1 கோடி வீணாகியுள்ளது.   தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவை தொகுதி மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் கடந்த 18 ம் நடைபெற்றது. இதில் சராசரியாக 71.87 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 80.49 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தப்பட்சமாக தென் சென்னையில் 56.41 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் உள்ள 3 தொகுதிகளை பொறுத்தவரை வடசென்னையில் 63.47 சதவீதமும், தென் சென்னையில் 56.41 சதவீதமும், மத்திய சென்னையில் 59.25 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது. 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை விட குறைவான வாக்குக்கள்தான் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் பதிவாகியுள்ளன.  வடசென்னை தொகுதியில் கடந்த தேர்தலில் 64.01 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. மொத்தம் உள்ள 14 லட்சத்து 22 ஆயிரத்து 392 வாக்காளர்களில் 9 லட்சத்து 10 ஆயிரத்து 452 பேர் வாக்களித்திருந்தனர். இந்தாண்டு 0.53 சதவீதம் குறைந்து 63.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் உள்ள 14 லட்சத்து 87 ஆயிரத்து 461 வாக்காளர்களில் 9 லட்சத்து 44 ஆயிரத்து 205 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

தென் சென்னை தொகுதியில் 2014 நாடாளுமன்ற தேர்தலில் 60.44 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மொத்தம் உள்ள 17 லட்சத்து 95 ஆயிரத்து 776 வாக்காளர்களில் 10 லட்சத்து 85 ஆயிரத்து 402 பேர் வாக்களித்திருந்தனர். இந்த முறை 4.1 சதவீதம் குறைந்து 56.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் உள்ள 19 லட்சத்து 73 ஆயிரத்து 315 வாக்களர்களில் 11 லட்சத்து 11 ஆயிரத்து 681 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். மத்திய சென்னை தொகுதியில் 2014 நாடாளுமன்ற தேர்தலில் 61.39 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் இருந்த 13 லட்சத்து 28 ஆயிரத்து 38 வாக்காளர்களில் 8 லட்சத்து 15 ஆயிரத்து 229 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். இந்த முறை 2.7 சதவீதம் குறைந்து 58.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.  மொத்தம் உள்ள 13 லட்சத்து 32 ஆயிரத்து 135 வாக்காளர்களில் 7 லட்சத்து 81 ஆயிரத்து 860 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் கேட்ட போது, சென்னையில் வாழும் பெரும்பாலான மக்கள் தென் மாவட்டங்களில் இருந்து குடிபெயர்ந்துவந்தவர்கள்தான். ெதாடர்ந்து 5 நாட்களுக்கு மேல் விடுமுறை வந்த காரணத்தால் அவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதனால்தான் வாக்குப்பதிவு குறைந்துள்ளது, என்றனர். சென்னையில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்க வைக்க வேண்டும் என்று நோக்கில் சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. மேலும் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஐபிஎல் நடைபெறும் நாட்களில் மைதானத்திற்கு வரும் ரசிகர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்காக மட்டும் ₹ 1 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் வாக்குப்பதிவு சதவீதத்தை பார்க்கும் போது இந்த தொகை முழுவதும் வீணாகியுள்ளது தெரியவருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : South Chennai ,Tamil Nadu , Rs 1 crore worth,outh Chennai, awareness programs , the lowest turnout , Tamil Nadu
× RELATED அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் பல...