×

பெரம்பூர் தொகுதி மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படும்: அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பிரசாரம்

சென்னை: பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் நேற்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது அவருக்கு அங்கு கூடியிருந்த ஏராளமான கட்சி தொண்டர்கள், பெண்கள், பொதுமக்கள் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து, நெற்றியில் திலகமிட்டு, மலர் தூவி வரவேற்றனர்.
கணநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த வேட்பாளர் ராஜேஷ்,  திறந்த  ஜீப்பிலும்,  நடந்தும் சென்று பிரசாரம் செய்தார். அப்போது, அங்கு கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது அடிப்படை தேவைகளை செய்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை நிறைவேற்றி தருவதாக  உறுதியளித்தார். இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த பெண்கள் எங்களின் வாக்கு இரட்டை இலை சின்னத்திற்கு என்று கோஷமிட்டு உற்சாகப்படுத்தினர்.

பின்னர், சுந்தரம் பிரதான தெரு, பவர் லைன், பள்ளம் தெரு  போன்ற பகுதிகளில் வீதி, வீதியாக சென்று வியாபாரிகள், பொதுமக்களிடம்  வாக்கு சேகரித்தார்.  அப்போது வேட்பாளர் ராஜேஷ் பேசியதாவது: அம்மாவின் ஆட்சியில் மக்களுக்கு தேவையான ஏராளமான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்கள் வாழ்வு வளம் பெற  இன்றளவும் பல திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டு  வருகிறது. பெரம்பூர் தொகுதி மக்களின் வாழ்க்கை தரம் இன்னும் மேம்படவும், இந்த தொகுதியை சென்னையில் முன்மாதிரியாக தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக அரசின் நலத்திட்டங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லப்படும். அம்மாவினால் பயனடைந்து இப்போது அம்மாவின் ஆட்சியை சீர்குலைக்க நினைக்கும் துரோகிகளுக்கு இந்த தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். எனவே  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று  அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajesh ,Perambur ,AIADMK , Perambur, AIADMK candidate, RS Rajesh, campaign,
× RELATED தேர்தலில் போட்டியிட இன்று முதல் விருப்பமனு பெறுகிறது பாமக!