×

தனி தொகுதி என தெரிவித்தும் வேட்பு மனுவை ஏற்க வலியுறுத்தி பொது பிரிவு வேட்பாளர் ரகளை: அதிகாரிகளிடம் வாக்குவாதம்

பூந்தமல்லி: பூந்தமல்லி (தனி) சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு தாக்கல் கடந்த 19 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  திமுக, அதிமுக, அமமுக, உள்ளிட்ட முக்கிய  கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று திருநின்றவூரை சேர்ந்த ராமன் (50) என்பவர் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவரது மனுவை அதிகாரிகள் சோதனை செய்தபோது சாதி சான்றிதழில் பொது பிரிவை  சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து அதிகாரிகள் அவரிடம், இது தனித் தொகுதி. இங்கு நீங்கள் போட்டியிட முடியாது என்று தெரிவித்தனர். அதற்கு அவர் நான் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன்.  ஏராளமான சமூக சேவைகள்  செய்துள்ளேன். பொதுமக்களுக்கு மேலும்  சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளேன். மேலும் டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரம் கையோடு கொண்டு வந்துள்ளேன் என்று  தெரிவித்தார்.

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எவ்வளவோ அவரிடம் விளக்கமாக எடுத்துக் கூறியும், அவர் அதனை  ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து அதிகாரிகளிடம் அடம் பிடித்து பிடிவாதமாக நான் வேட்பு மனு தாக்கல் செய்வேன் என  தெரிவித்து விட்டு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுவை வாபஸ் பெற்றால் டெபாசிட் கட்டிய தொகை திரும்ப கிடைக்கும். தள்ளுபடி செய்தால் டெபாசிட் தொகை கிடைக்காது என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதற்கு அவர் நான் மனுவை வாபஸ்  வாங்க மாட்டேன். வாபஸ் பெறுவதற்காகவா வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தேன்? என்று திருப்பி கேட்டார். இதனால், தேர்தல் அதிகாரிகள் திணறினர். நீண்ட இழுபறிக்கு பின் சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்து விட்டு சென்றார். தேர்தல் அதிகாரியும் மனுவை வாங்கிக் கொண்டார். சமூக சேவையில் இருக்கும் நபர் தனி தொகுதி எது, பொது தொகுதி எது என தெரியாமல் வேட்பு மனு தாக்கல் செய்த அவரைப் பார்த்து அங்கிருந்தவர்கள் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituency ,section candidates , separate constituency , general section, candidates,authorities
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...