×

திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி 3 தொகுதிக்கும் தேர்தல் நடத்த தயார் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தால் ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக பேசியதாக அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, திமுக தலைவர்கள் மீதும் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்த வீடியோ காட்சியை, கண்காணிப்பு கமிட்டியினர் பார்வையிட்டு தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அளிப்பார்கள். பின்னர் அந்த விவரம் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்கப்படும்.

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள சுமார் 3.5 லட்சம் பேரும், தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் 63,077 பேரும் தபால் ஓட்டு போட தகுதியுள்ளவர்கள். சூலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மரணம் அடைந்ததையடுத்து அந்த தொகுதி காலியானதாக தமிழக அரசு அறிவித்து கடிதம் எழுதியுள்ளது. இந்த தகவல் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் குறித்து நடைபெற்று வந்த வழக்கும் முடிவடைந்ததால், இதுபற்றி தகவல்களை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளோம். அரவக்குறிச்சி தொகுதியில் இன்னும் வழக்கு முடிவடையவில்லை. அதனால், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டால், அங்கு தேர்தல் நடத்த தமிழக தலைமை தேர்தல் அலுவலகம் தயாராக உள்ளது. அதற்கான வாக்குப்பதிவு எந்திரங்களும் போதுமான அளவு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் பறக்கும் படையால் 210 கிலோ தங்கம் பறிமுதல்

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து நேற்று முன்தினம் வரை  சரியான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றதாக ரூ.29 கோடியே 34 லட்சம்  பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சரியான ஆவணங்களை காட்டி 4.45 கோடி ரூபாயை சம்பந்தப்பட்டவர்கள் திரும்ப பெற்றுக்கொண்டுள்ளனர். அதேபோன்று 209.5 கிலோ  தங்கமும், 31 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூரில்  பிடிக்கப்பட்ட 94 கிலோ தங்கம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ottapidaram ,constituencies ,Chief Electoral Officer ,Tamil Nadu , Tiruparankundam, Ottapidaram and Aravakuri 3 constituencies
× RELATED தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும்...